தென்னிந்திய சினிமாவின் தலைநகரம் - கோயம்புத்தூர்

1 comments

கோயம்புத்தூர் என்றவுடன் நினைவுக்கு வருவது,தொழிற்சாலைகள், கொங்கு தமிழ், சிறந்த கல்லூரிகள், அடுமனைகள் என சொல்லிக்கொண்டே போகலாம்.
கோவை தொழிற்சாலைகள் நிறைந்த ஊர் என்பதே எல்லோருடைய மன பிம்பம் ஆனால் 1950 வரை எல்லா திரைபடங்களும் இங்குதான் எடுக்கப்பட்டது என்பதே உங்களால் நம்ப முடிகிறதா. தென்னிந்திய சினிமாவின் தலைநகரமாக சிம்ம சொப்பனமிட்டு இருந்த ஊர் கோவை.

சென்ற பதிவில் தென்னிந்திய சினிமா உருவானதை பற்றி எழுதியிருந்தேன்.
இந்த பதிவில் கோவை எப்படி சினிமா துறைக்கு பங்காற்றியது என்பதை பார்ப்போம்.


திரைப்படங்களின் தலைநகரம்:

சாமிக்கண்ணு வின்சென்ட் 1914 முதல் திரையரங்கை "Variety Hall Cinema" என்ற பெயரில் Town Hall ல் அமைத்தார். இப்பொது Delite Theatre என்ற பெயரில் இயங்கி கொண்டிருக்கிறது. பின்னர் ர.கே ராமகிருஷ்ணன்,C.N. வேங்கடபதி நாய்டு,S.பீமா செட்டி,S.M.ஸ்ரீராமுலு மற்றும் P.A.ராசு இணைத்து Central Studio's அமைத்தனர். ஸ்ரீராமுலு நாயுடு Pakshiraja Studio யை நிறுவினார். அது தென்னிந்திய சினிமாவின் மகுடமாக விளங்கியது (தற்போது அது கல்யாண மண்டபமாக இயங்குகிறது ). Pakshiraja Studio ல் இருந்து தயாரிக்கப்பட்ட "மலைக் கள்ளன்" மிகப் பெரிய வெற்றி பெற்றது. இது அந்த காலத்தில் 6 மொழியில் எடுக்கப்பட்டது. Coimbatore Talkies , Parameswaran Talkies ,Pakshiraja Studio மற்றும் Central Studios போன்றவை பல வெற்றி படங்களை தயாரித்தன. இந்த Studio கள் யாவும் கோயம்புத்தூரில் நிறுவப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக்காலத்தில் தென்னிந்தியாவில் வேறு எங்கும் திரையரங்களும், ஸ்டுடியோகளும் இல்லை என்பதே உண்மை.


திலிப் குமார் ,மீனா குமாரி நடித்த Azaad திரைப்படம் Central Studioல் எடுக்கப் பட்டது.இந்தப் படம் வெள்ளி விழா கொண்டாடிய படமாகும்.Central Studio ல் தங்கும் அறைகள் இருந்தன.அங்கு சினிமா கலைஞர்கள் தங்கிதான் பல படங்களை எடுத்துள்ளனர்.

ஸ்ரீராமுலு ஜகதலப்ரதாபன்,கன்னிகா,மலைக் கள்ளன் போன்ற பல வெற்றி படங்களை கோவையில் தயாரித்தார்.

Ashok Pictures மற்றும் Jupiter production கம்பெனி பல படங்களை இங்கு தயாரித்தனர்.


ராசு செட்டியார் 1937 முருகன் தியேட்டரையும் 1938 ராஜா தியேட்டரையும் நிறுவி Chandra Prabha Pictures என்ற பெயரில் பல படங்களை தயாரித்து வெளியிட்டார். P.A.R விஸ்வநாதன் "Coimbatore Film Distribution Association" கோபலபுரத்தில் நிறுவினார். முதன் முதலில் நகை விளம்பரங்களுக்கு அப்போதைய கதாநாயிகளான அஞ்சலிதேவி மற்றும் வரலட்சுமி யை நடிக்க வைத்தனர். இந்தியாவின் சிறந்த கேமிராக்கள் Projectors பயன்படுத்தப்பட்டன.
N.H Road ல் இருந்த கடைகள் திரைப்படங்களுக்கு தேவையான எல்லா பொருட்களும் கிடைத்தன. குறிப்பாக Projectors  அதிகமாக விற்பனை செய்யப்பட்டன.


திரைப்படங்களின்  விநியோகம் பெரிய தொழிலாக கோயம்புத்தூரில் இருந்தது. பல நூறு திரைப்பட ஆபீஸ் கோபாலபுரம் ரோட்டில் அமைந்திருந்தது.
ஸ்ரீனிவாச தியேட்டர் ( Broke Bond road ) ,ரெயின்போ  தியேட்டர் ஆங்கில படங்களை திரையிட்டன.ஸ்ரீபதி தியேட்டரில் European படங்கள் சப் டைட்டிலுடன் திரையிடப்பட்டன.

சினிமா பிரமுகர்கள் தொடக்க வாழ்க்கை :

இந்திய சினிமாவின் ஜாம்பவான்கள் என்று சொல்லப்படும் பலரின் வாழ்க்கை தொடங்கியது கோயம்புத்தூரில்தான். 1936 ல் சதிலீலாவதி படத்தில் கதாநாயகனாக தனது (19 வயதில்) அறிமுகமானார் M.G.R ( மருதூர் கோபால ராமச்சந்திரன் ). மருதாசலம் செட்டியார் அந்த படத்தை தயாரித்தார். அந்த படத்திற்காக ரூபாய் 100 யை சம்பளமாக பெற்றார் M.G.R.
1936 ல் ஸ்ரீராமுலு நாய்டு தயாரித்த மலைக் கள்ளன் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. M.G.R ன்  மற்றொரு வெற்றிப் படமான நாடோடி மன்னன் படத்திற்கு 10 kg வெள்ளி வாழும் ,கேடயங்களை பரிசாக அளிக்கப்பட்டது.அந்த பரிசுடன் N.H ரோட்டு முதல் ராஜா தியேட்டர் வரை ஊர்வலமாக வந்தார் M.G.R அவர்கள்(M.G.R தயாரித்த முதல் திரைப்படம் நாடோடி மன்னன்).



தென்னிந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டாரான M.K தியாகராஜா பாகவதரின், வேணுகானம்,சொக்கமேல மற்றும் அழிவின் பாடை போன்ற படங்கள் கோவையில் எடுக்கப்பட்டன. சிவாஜி நடித்த மரகதம் படமும்கோவையில் எடுக்கப்பட்டன. கருணாநீதி மற்றும் N.T.R போன்ற அரசியல் தலைவர்களும் தனது திரையுலக வாழ்க்கை இங்கிருந்துதான் தொடங்கினார்.N.S  கிருஷ்ணன் ,T .M சௌந்தரராஜன்,M.K ராதா, T.S பாலைய்யா போன்ற திரையுலக மேதைகளும் தமது வாழ்க்கையை கோவையில் இருந்துதான் தொடங்கினார்கள்.

தேவர் பிலிம்ஸ் கூட கோவையிலிருந்து தொடங்கப்பட்டத்தாகும். கோவையை சேர்ந்த ஜெயசங்கர்,R.சுந்தர்ராஜன்,மணிவண்ணன், சிவக்குமார், பாக்கியராஜ், சத்தியராஜ் ,கிருஷ்ணன் பஞ்சு ,ரகுவரன் போன்றவர்கள் சினிமா துறையில் மிகப் பெரிய பங்காற்றியவர்கள். சினிமாவை வளர்த்த கோவைப் பற்றி உங்களுடன் பகிர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி.


தொடரும்...
நன்றி : Book:Coimbatore and the World of Cinema , Hindu

உண்மையில் கண்ணகி மதுரையை எரித்தாளா?

0 comments

    சமீபத்தில் S ராமகிருஷ்ணன் அவர்களின் காணொலியை பார்க்க நேரிட்டது. அதில் அவர் சிலப்பதிகாரத்தை பற்றியும் கண்ணகி பற்றியும் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்தார். சிலப்பதிகார கதையை தவிர்த்து கண்ணகி பற்றி எந்த விஷயமும் எனக்கு தெரியாது.கண்ணகி என்பது வெறும் கற்பனை பாத்திரமா? இல்லை உண்மையில் அவள் வாழ்த்தாளா? என்ற கேள்வி எனக்குள் கண்ணகி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலை தூண்டியது.கண்ணகி பற்றி நான் சேகரித்த விஷயங்களை இந்த பதிவில் தருகிறேன்.

மதுரையை எரித்தாளா:

    கண்ணகி மற்றும் கோவலன் கதை எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே(அதனால் மீண்டும் அதை நான் இங்கு எழுதவில்லை). சிலப்பதிகாரத்திற்கு என்று ஒரு தனி சிறப்புண்டு. உலகில் உள்ள எந்த இலக்கியமும் வணிகரை பேசியது கிடையாது, ஆனால் சிலப்பதிகாரத்தில் மட்டும்தான் வணிகரை பற்றியும், அவர்களின் வாழ்க்கை முறை பற்றியும் விரிவாக எழுதப்பட்டுள்ளது.கோவலனும் மாதவியும் கூட வணிக குலத்தை சேர்ந்தவர்கள்தான்.கோவலன் இறந்தவுடன், தன் கணவருக்கா பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனிடம் வாதாடி,கோவலன் குற்றமற்றவன் என்பதை நிருபித்துவிட்டு பின் கோபத்தில் மதுரையை எரித்தாள் என்பதுதான் வரலாறு என்றாலும், ஒரு சிலர் அதை வேறு கோணத்தில் பார்க்கிறார்கள்.

    கோவலன் வணிக குலத்தை சேர்த்தவன், அவன் கொல்லப்பட்ட செய்தியை அறிந்தவுடன்,மதுரையில் உள்ள வணிகர்கள் கோபப்பட்டு, தங்கள் எதிர்ப்பை காட்டும் விதமாக சில இடங்களில் தீ வைத்தாகவும்,அந்த செய்தி மதுரை முழுவதும் பரவியதாகவும், நாளிடைவில் அந்த செய்தி மருவி கண்ணகி மதுரையை எரித்தாள் என்று கூறப்பட்டதாகவும் ஒரு கருத்து உண்டு.

அழிக்கப்பட்ட கண்ணகியின் சிலைகள்:

   கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பு எழுதப்பட்டது சிலப்பதிகாரம். கண்ணகிக்கு கேரளா,இலங்கை என்று பல இடங்களில் கோவில்கள் உண்டு, ஆனால் தமிழ்நாட்டில் எங்கும் கோவில்கள் கிடையாது என்ற செய்தி என்னை வியப்பில் ஆழ்த்தியது.( மதுரையில் மட்டும் செல்லத்தம்மன் என்ற ஒரே ஒரு கண்ணகி கோவில் மட்டும்தான் உள்ளது). மனிதன் ஆதிகாலத்தில் இயற்கையையும், தன் முன்னோர்களையும் தெய்வமாக வணங்கினான். அந்த மாதிரியான தெய்வங்கள் நாட்டார் தெய்வங்கள் என்று அழைக்கப்பட்டன.

    குறிப்பாக பெண் தெய்வங்கள் யாவும் வஞ்சிக்கப்பட்ட பெண்களாகும். அவர்களின் தியாகத்திற்காக அவர்கள் தெய்வமாக்கப்பட்டார்கள். இப்படி பல பெண் தெய்வங்கள் தமிழ்நாட்டிலுண்டு. அப்படியானால் கண்ணகிக்கு என்று கண்டிப்பாக பல கோவில்கள் இருந்திருக்க வேண்டும், ஆனால் இந்த சிறு தெய்வங்கள் யாவும் பிற்காலத்தில் எழுச்சி பெற்ற சைவ,வைணவ,சமண, பௌத்த கடவுள்களால் சூரையாடப்பட்டன.சில தெய்வங்கள் பெரிய தெய்வமாக வேறு பெயர்களாக மாற்றப்பட்டன.கண்ணகிக்கும் அதே நிலைதான் ஏற்பட்டது.

கண்ணகி கோவில்கள் பத்தினி என்ற பெயரில் பெண் தெய்வமாக புத்த துறவிகளாலும், கண்ணகி அம்மனாக தமிழர்களால் இலங்கையில் வழிபடப்படுகிறது. கேரளாவில் கொடுங்கநல்லூர் பகவதி ,மங்கள தேவி ,அட்டுகல் அம்மன் என்ற பெயரில் வழிபடப்படுகிறது.

செல்லத்தம்மன் கோவில்



Chellathamman
தமிழ் நாட்டில் உள்ள ஒரே கண்ணகி கோவில் இந்த செல்லத்தம்மன் கோவிலாகும்.

மங்கள தேவி கண்ணகி கோவில்:

   இந்த கோவில் தமிழ்நாடு,கேரளா எல்லையில் உள்ள வண்ணதிபாறை என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த கோவில் கடல் மட்டத்திலிருந்து 4 ஆயிரத்து 380 அடி உயரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் மீது அமைந்துள்ளது.கண்ணகியை தெய்வமாக வணக்கிய வேடுவர்கள் சித்திரா பௌர்ணமியன்று விழா எடுத்தனர். அதன் அடிப்படையில் தற்போதும் அன்று ஒருநாள் மட்டும் விழா நடக்கிறது.

mangaladevi temple

    மதுரையை எரித்தபின் தென்திசை வழியாக 14 நாள் நடந்து இவ்விடத்துக்கு வந்தாள். அப்போது விண்ணுலகிலிருந்து புஷ்பக விமானத்தில் வந்த கோவலன், கண்ணகியை அழைத்துச் சென்றான். இதைக்கண்டு ஆச்சரியமடைந்த மலைவாழ் மக்களான வேடுவர்கள்,அவளை தெய்வமாக பாவித்து "மங்கள தேவி" என்ற பெயரில் வணங்கினர்.

    ஒரு சமயம் சேரன் செங்குட்டுவன், இப்பகுதிக்கு வேட்டையாட வந்தான். அவனிடம் மக்கள் தாங்கள் கண்ட அதிசயத்தைக் கூறினர். மகிழ்ந்த மன்னன் , இங்கு வந்தது கண்ணகி என அறிந்து மகிழ்ந்தான். சிலப்பதிகாரம் சொல்லும்  ' "உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்" ' என்னும் வாசகத்துக்கு ஏற்ப , இங்கு அவளுக்கு கோயில் எழுப்ப விருப்பம் கொண்டான். இதற்காக இமயத்திற்கு சென்று கல் எடுத்து , அதை கங்கையில் நீராட்டி , கண்ணகிக்கு சிலை வடித்தான் , இங்கு கோயில் கட்டி சிலையைப் பிரதிஷ்டை செய்தான்.

கொடுங்கநல்லூர் பகவதி கோயில்

Kodungallur Bhagavathy

   இந்த கோவில் கேரளாவில் உள்ள திரிசூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் குறும்பா பகவதி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அம்மன் எட்டு கைகளுடன் காட்சியளிக்கிறாள். அசுரரின் தலை ,வாழ் , மணி , சிலம்பம் என்று ஒவ்வொரு கையில் ஒரு பொருளை ஏந்தி உக்கிரமாக காட்சியளிக்கிறாள்.இந்த கோயில் சேரன் செங்குட்டுவனால் கண்ணகிகாக கட்டப்பட்ட கோயிலாகும். அம்மன் கையில் உள்ள சிலம்பம்தான், கண்ணகியின் கால் சிலம்பு என்று கூறுகிறார்கள் .

அட்டுகால் கோயில் :

   கண்ணகி கடைசியாக வந்து அமர்ந்த இடம் கொடுங்கநல்லூர் பகவதி கோயில். அந்த கோயிலுக்கு வரும் வழயில் அட்டுகால் வந்தடைந்தாள் கண்ணகி. அங்கு சிறுமியின் உருவம் எடுத்த கண்ணகி, அங்குள்ள ஆற்றை கடக்க உதவுமாறு அங்குள்ள ஒரு வயதானவரை கேட்டதாகவும் , அவர் அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது. அந்த பெண் அந்த இடத்திலிருந்து மறைந்ததாகவும், அந்த முதியவரின் கனவில் வந்து தனக்கு ஒரு கோயில் கட்ட சொன்னதாகவும் , அவர் கட்டிய கோயில்தான் அட்டுகால் கோயிலாகும் .

கண்ணகி அம்மன் - இலங்கை :

Vatrappalai-Kannaki-Amman-Kovil

   வற்றாப்பாளை கண்ணகி அம்மன் கோயில் முல்லைதீவு மாவட்டத்தில் உள்ளது. மதுரையை எரித்த பின் கண்ணகி பத்தாவது இடமாக இலங்கையில் ஓய்வெடுத்த இடமாக அறியப்படுகிறது. இலங்கையில் உள்ள எல்லா பக்தர்களும் வைகாசி விசாகம் தேதியில் அம்மனுக்கு சர்க்கரை பொங்கல் படைத்து தங்கள் வேண்டுதலை அம்மனிடம் முறையிடுவார்கள்.

பத்தினி கோவில் :

pattini

   சிங்கள புத்த துறவிகளை பொறுத்தவரை பத்தினி என்பது புத்த மதத்தை காக்கும் தெய்வமாகும். சிங்கள மத கருத்துப்படி, பத்தினி அம்மன் கண்ணகியின் வடிவமெடுத்து, மூன்று கண்களுடன் பிறந்த கொடிய பாண்டிய மன்னனை அழித்தாக கருதப்படுகிறது. முதலாம் கஜபாதான் இலங்கைக்கு சிலப்பதிகாரத்தையும், கண்ணகியையும் அறிமுகம் செய்தார். அப்போது கண்ணகி கிரி அம்மா (Milk mother) என்ற பெயரில் வணங்கப்பட்டாள். இலங்கையில் கண்டி,முல்லைதீவு,மெடகொட,பனாமா,மாது,தேடிகமா,கடுவெல போன்ற பல இடங்களில் கோவில்கள் உள்ளன.

இவ்வாறு கேரளா,இலங்கை போன்ற இடங்களில் கொண்டாடப்படும் ஒரு தமிழ் பெண்ணிற்கு, ஒரு கோவில் கூட இல்லாததும்,இருந்த ஒரு சிலையை அகற்றிய பெருமை தமிழகத்திற்க்கு மட்டுமே சாரும்.

வேர்களையும், பழமையையும் தொலைத்துவிட்டு வெறும் மேற்கத்திய மோகத்தில் வாழ்வது எந்த பயனையும் நமக்கு தராது.
நமக்கென்று உள்ள பழக்கவழக்கத்தையும் பாரம்பரியத்தை மீட்டு எடுப்போம்.

தென்னிந்திய சினிமா உருவான வரலாறு - (கோவை)

0 comments

இன்று வாழும் ஒருவரிடம் தென்னிந்திய சினிமா எங்கு தோன்றியது என்று கேட்டால் உடனே சொல்லும் பதில்சென்னைதான். இதில் என்ன சந்தேகம். எல்லா Studio களும் இங்குதான் உள்ளன. எல்லா திரைப்பட கலைஞர்களும் சென்னையில்தான் வசிக்கிறார்கள் பிறகு வேறெங்கு இருக்கும்? ஆனால் வரலாற்றை சற்று பின்னோக்கி பார்த்தால் தென்னிந்திய சினிமா தோன்றியது கோயம்புத்தூரில் என்பதை நம்ப முடிகிறதா?

Samikannu Vincent

சினிமா உலகிற்கு அறிமுகபடுத்தப்பட்டு சரியாக பத்து வருடத்தில் கோயம்புத்தூரை சார்ந்த ஒரு சாதாரண 21 வயது இளைஞன் சினிமாவை தென்னிந்தியாவிற்கு கொண்டு வந்தார் அவர் பெயர் "சாமிக்கண்ணு வின்சென்ட்". சவுத் இந்தியன் ரயில்வேஸில் 25 RS சம்பளத்திற்கு கிளர்க்காக வேலை செய்தவர் சாமிக்கண்ணு. அவர் கோயம்புத்தூரில் உள்ள கோட்டை மேட்டில் பிறந்தவர்.
( 18 ஏப்ரல் 1983 to 22 ஏப்ரல் 1942). ஆரம்பகால பிரெஞ்சு மொழியின் பேசாத திரைப்படங்கள் மீது இவருக்கு ஆசை அதிகமானது. 1905 பிப்ரவரி மாதம் 2,250 Rs ஒரு பிரெஞ்சு சினிமா அதிபரிடம் ( Du Pont ) இருந்து சினிமா ஒளிபரப்பும் Projector வாங்கினார்.


Samikannu Vincent

பின்னர் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு படங்களை எல்லா ஊர்களுக்கும் சென்று திரையிட்டார். இவர் எல்லா ஊர்களுக்கும் பயணம் செய்து டென்ட் அமைத்து படங்களை மக்களுக்கு காட்டினார். "Life of Jesus" என்ற படம் மக்களின் மத்தியில் பிரபலமானது இப்படிதான் டென்ட் சினிமா உருவானது. இவர் சிங்கப்பூர் ,மலேசியா ,பெஷாவர்,மியான்மர் மற்றும் ஆப்கானிஸ்தான் பயணம் செய்து தனது படங்களை திரையிட்டார். 1905 ம் ஆண்டு தனது முதல் Tent சினிமாவை Edison's Grand Cinema Mega Phone என்ற பெயரில் வெளியிட்டார்.

Variety Hall Theatre

1914 ம் ஆண்டு முதன் முதலில் சினிமா தியேட்டரை தனது சொந்த ஊரான கோயம்புத்தூரில் Variety Hall Talkies என்ற பெயரில் திறந்தார். இன்று Delite தியேட்டர் என்ற பெயரில் இயங்குகிறது. இந்த திரையரங்கம்தான் Madras Province ன் ( Madras Province என்பது தமிழ்நாடு,கேரளா,ஆந்திரா மற்றும் கர்நாடகாவின் ஒரு சில இடங்கள் சேர்த்த பகுதியாகும்) முதல் திரையரங்கம். 1919 ல் மின்சாரத்தில் இயங்கக்ககூடிய "Power-driven Rice and Flour மில்லை கோவையில் திறந்தார். Vincent Forces Cinema என்ற பெயரில் திருச்சி ரோட்டில் ஒரு டூரிங் டாகீஸ்யை பிரிட்டிஷ் வீரர்கள் ஆங்கில படம் பார்பதற்காக உருவாக்கினர். சாமிக்கண்ணு வின்சென்ட் கோவையில் 12 தியேட்டரை திறந்தார்.

ஆங்கில படங்களை திரையிடுவதற்கு Rainbow தியேட்டரை திறந்தார். R.S புறத்தில் Light House தியேட்டரை திறந்தார் அதில்தான் முதன் முதலாக அன்னபூர்ணா சிறிய கேண்டீன் மூலம் பயணத்தை தொடங்கினார்கள். தற்போது அந்த திரையரங்கம் Kennedy Theatre என்று அழைக்கப்படுகிறது. Variety Hall Talkies திலிப் குமாரின் பல ஹிந்தி படங்களை திரையிட்டன அவை மிகப்பெரிய வெற்றி பெற்றன. Edison மற்றும் Carnatic தியேட்டர்களில் தமிழ் படங்கள் திரையிடப்பட்டன.

Delite Theatre

1933 ம் ஆண்டு Pioneer Film Company மற்றும் Calcutta கம்பெனியுடன் இணைந்து சாமிக்கண்ணு வின்சென்ட் அவர்கள் "வள்ளி" என்ற படத்தை தயாரித்தார். அந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.மேலும் Calcutta நிறுவனம் தயாரித்த "வள்ளி திருமணம்" என்ற படத்தை அவரின் திரையரங்குளில் வெளியிட்டார் அந்த படம் வசூலில் வரலாற்று சாதனை பெற்றது. அந்த வெற்றியை தொடர்ந்து சம்பூர்ண ஹரிசந்திரா என்ற படத்தை தயாரித்தார். 1935 ம் ஆண்டு "சுபத்ர பரிணயம்" என்ற படத்தை தன்னுடைய Variety Hall Talkies என்ற பெயரில் தயாரித்தார்.

இவ்வாறு சினிமாவை தென் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்திய மனிதரை பற்றி எந்த குறிப்பும் மக்களிடையே இல்லை.இந்திய சினிமாவின் முதல் கோட்டீஸ்வரர் சாமிக்கண்ணு வின்சென்ட் ஆவார்.

இந்த பதிவின் மூலம் அவரை நினைவுப்படுத்தியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அடுத்த பதிவில் கோவையில் எடுக்கப்பட்ட படங்களை பற்றி காண்போம்.

தொடரும்...

நன்றி : Book:Coimbatore and the World of Cinema , Hindu

தெரிந்த ஊர் தெரியாத தகவல்கள் - கோயம்புத்தூர்

3 comments


நான் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்த்தவன். என் நகரத்தை பற்றி இணையத்தில் தேடும்போது பல அறிய தகவல்கள் கிடைத்தன. சினிமா,தொழில்,கல்வி,வணிகம் என்று பல துறைகளில் தென்-இந்தியாவிற்கு முன்னோடியாக கோயம்புத்தூர் இருந்துள்ளது.சங்க காலத்தில் இருந்து இதற்கு பல சான்றுகளும் இருக்கிறது.நான் சேகரித்த செய்திகளை ஒரு சில பதிவுகளில் தருகிறேன்.


கோயம்புத்தூர் என்ற பெயர் வந்ததற்கு இரண்டு வகையான காரணங்கள் சொல்லப்படுகின்றன.

1. பல வெள்ளாளர்கள் புது ஊர்களைத் தோற்றிவித்து இருக்கிறார்கள்.இவர்களில் பலர் கோவன் என்ற பெயர் கொண்டவராக இருந்தனர்.அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட புத்தூர் தான் கோவன் புத்தூர் என்பது. அது மருவி கோயம்புத்தூர் என்று ஆயிற்று.
2. பழங்காலத்தில் இப்பகுதி பழங்குடியின வசிப்பிடமாக இருந்துள்ளது.அவர்களில் மிகுந்த வலிமையான,பெரும்பான்மையான கோசர்கள் இன மக்கள் கோசம்புத்தூர் என்னும் இடத்தை தலைமையிடமாக கொண்டு வசித்தனர்.இவர்கள் வாழ்த்த இடமான கோசம்புத்தூர் காலபோக்கில் பெயர் மருகி கோயம்புத்தூர் என்று அழைக்கப்படுகிறது.

Coimbatore


இப்பழங்குடிகளின் ஆதிக்கம் நீண்ட காலம் நீடித்து இருக்கவில்லை.இப்பகுதி இராஷ்டிரகுட் டர்களின் படையெடுப்பால் அவர்களின் வசமானது. இராஷ்டிரகுட்டர்களிடமிருந்து சோழர்களின் கைகளில் வீழ்ந்தது(9ம் நூற்றாண்டு). சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின் கொங்கு மண்டலம் சாளுக்கியர்கள் மற்றும் அவர்களுக்கு பின்னல் வந்த பாண்டியர்களாலும்,ஹோசைலர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டது.பாண்டிய மன்னர்களுக்கிடையே ஏற்பட்ட உள்நாட்டு சண்டையினால் இப்பகுதி டில்லி முகலாயர்களிடம் வீழ்ந்தது.முகலாய மன்னர்கள் காலத்தில் ஆந்திர,கர்நாடக மக்கள் இங்கு குடிபெயர்தனர். பின்னர் மதுரை சுல்தான்களிடமிருந்து விஜய நகர ஆட்சியாளர்கள் இப்பகுதியை போரிட்டு வென்றனர்.1550களில் விஜய நகர பேரசின் தளபதிகளாக இருந்த தெலுங்கு பேசும் நாயகர்கள் இங்கு குடியேறினர்.

முத்து வீரப்ப நாயகரின் ஆட்சிக் காலம் மற்றும் திருமலை நாயகர்கள் ஆட்சிக் காலத்திலும் ஏற்பட்ட உள் நாட்டு சண்டை,விட்டு விட்டு வந்த போர்களினாலும் விஜய நகர பேரரசு அழிவதற்கு காரணமானது.இதன் விளைவாக திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் கொங்கு மண்டலம் மைசூர் ஆட்சியர்களின் கைகளில் வீழ்ந்தது.அவர்களிடமிருந்து ஹைதர்அலி இப்பகுதியை கைப்பற்றினர்.ஆயினும் 1799ல் மைசூரில் திப்பு சுல்தானுக்கு ஏற்பட்ட வீழ்ச்சியினால் கொங்கு மண்டலம் மைசூர் மாகராஜாவால் கிழக்கிந்திய கம்பெனிக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது. இதற்கு கைம்மாறக திப்பு சுல்தானிடம் இழந்த ராஜ்ஜியத்தை மீண்டும் மைசூர் மகாராஜாவுக்கு பிரிட்டிஷார் வழங்கினர்.அதிலிருந்து 1947ல் இந்தியா சுதந்திரம் அடையும் வரை கோவை மண்டல பகுதி பிரிட்டிஷாரின் முறையான நிர்வாகத்தின் கீழ் இருந்தது.


Coimbatore-Municipal


சில குறிப்பிட்ட இனத்தையோ , மொழியையோ சார்ந்த மக்கள் ஒரு ஊரில் வசிப்பது என்பது வெறும் 50 ஆண்டுக்கு முன் ஏற்பட்ட நிகழ்வு இல்லை என்பதற்கு கோவை ஒரு சிறந்த உதாரணம்.கோவையில் தெலுங்கு, மற்றும் கன்னடம் பேசும் மக்கள் அதிகம். இவர்கள் 14 ம் நூற்றாண்டு முதல் இங்கு வசிக்கின்றனர். தொடர்ந்து கொங்கு மாநிலம் பல மன்னருக்கு அடிமையாக இருந்ததால் அங்கு பேசும் தமிழில் மிக அதிகமான மரியாதை இருக்கும்( வாங்க, போங்க, உட்காருங்க) வேறு எந்த ஊரில் பேசப்படும் தமிழில் இவ்வளவு மரியாதை இருக்காது. எனவே ஒரு மொழிக்கும் அதன் ஆட்சிக்கும் கூட ஒரு முக்கிய தொடர்பு உள்ளது.

கோயம்புத்தூரின் பல இடங்களின் பெயர் எப்படி வந்தது என்ற சுவாரசியமான தகவல்களை காண்போம்.

ஒப்பணக்கார வீதி : விஜயநகர பேரரசில் சேனைகளில் வேலை பார்த்த பலிஜா சமூகத்தினர் பணம் ஒப்புவிக்கும் ( பணம் பட்டுவாடா) பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.அவர்கள்தான் இந்த பெயருக்கு காரணமான ஒப்பணக்காரனர்கள். பணத்தை ஒப்புவிக்கும் பலிஜா சமூகத்தினர் குடியேறியதால் ஒப்பணக்கார வீதி என்ற பெயர் வந்தது.

R.S புறம்: 1903ல் கோவையில் வேகமாகப் பரவிய பிளேக் நோயால் ஏரளமான உயிர்பலிகள் நிகழ்தன. எண்ணற்றோர் தங்கள் இருப்பிடங்களை காலி செய்து இடம் மாறினர்.மேலும்,மக்கள் நெருக்கம் மிகுந்த நகரில் சுகாதாரக் குறைபாடுகள் அதிகம் இருந்தது.எனவே நகரை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.அப்போது மேட்டுபாளையம் ரோடு மற்றும் தடாகம் ரோடுக்கு இடையே இருந்த பல நூறு ஏக்கர் நிலத்தை வாங்கிய நகரசபை நிர்வாகம் அதை மனைகளாகப் பிரித்தது.பின் அப்பகுதிக்கு கோவை நகராட்சி மன்றத் தலைவராக இருந்த இரத்தினசபாபதி முதலியாரின் பெயர் வைக் கபட்டது.ரத்தின சபாபதிபுரம் என்னும் பெயர் சுருங்கி ஆர்.எஸ்.புறம் என்று ஆயிற்று.

சபர்பன் ஸ்கூல்: பிளேக் நோய் காரணமாக நகரம் விரிவாக்கப்பட்டபோது ஆர்.எஸ்.புறம்,கெம்பட்டி காலனி,தேவாங்கப் பேட்டை உள்ளிட்ட புற நகரங்கள் உருவாக்கப் பட்டன.அந்த நாளில் பிராமணர்களுக்காக உருவாகப்பட்ட ராம்நகரும் கூட ஒரு புறநகரமே. அந்த புற நகரில் ஏற்படுத்தபட்ட பள்ளி என்பதால் சப்-அர்பன் பள்ளி என்று அழைக்கபட்டது.அது மருவி சபர்பன் பள்ளியாயிற்று.



சுக்கிரவார் பேட்டை& தேவாங்க பேட்டை:கன்னடம் மற்றும் தெலுங்கில் "சுக்கிர வராம்" என்றால் வெள்ளிக்கிழமை என்று பொருள்.கடைகள் நிறைந்த வியாபாரப் பகுதியை "பேட்டை" என்பார்கள். அன்றைய நாளில் வெள்ளிக்கிழமை தோறும் சந்தை கூடிய இடத்திருக்கு பெயர்தான் சுக்கிரவார் பேட்டை. தேவாங்க செட்டியார் அதிகம் வசித்த பகுதியில் நெசவுத் தொழிலும் புகழ் பெற்று விளங்கியதால் தேவாங்கப் பேட்டை ஆயிற்று.

டவுன்ஹால் : விக்டோரியா ராணி பதவியேற்று 50 ஆண்டுகள் ஆனதை நினைவூட்டும் வகையில் 1887ல் கோவை நகராட்சியின் மையப்பகுதியில் நகர மண்டபம் ஓன்று கட்டப்பட்டது. 1892 இல் திறக்கப்பட்ட அந்த மண்டபம் இருந்த இடம்தான் டவுன்ஹால் என்று அழைக்கப்பட்டது.

கோட்டை மேடு : டவுன்ஹால்க்கு பின்புறம் கோட்டை இருந்தது.பிரிட்டிஷ் மற்றும் மைசூர் படைகளுக்கு இடையே நடந்த யுத்தத்தில் சிக்கி அந்தக் கோட்டை சின்னபின்னமானது.1972ல் திப்புவின் உத்தரவின் பேரில் இந்த கோட்டை தரைமட்டமாக்கப்பட்டது.அந்த கோட்டை இருந்த இடம்தான் இன்றைய கோட்டை மேடு.

ராஜா வீதி : ஆசிரியர்ப் பயிற்சி பள்ளியும்,பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் இயங்கும் கட்டடம்தான் அன்றைய மதோராஜா மஹால்.மைசூர் அரசின் அதிகாரியான அந்த மதோராஜா,அந்த வீதியில் குடியிருந்து ஆட்சி செலுத்தியதால் அந்த வீதிக்கு ராஜாவீதி என்று பெயர்.

காட்டூர் : அவினாசி ரோடு மேம்பாலம் முதல் வட கோவை சிந்தாமணி வரையில் முன்பொரு காலத்தில் பனங்காட்டுக் குளம் என்ற குளம் இருந்தது.நாளிடைவில் அந்த குளம் அழிய,குளமிருந்த இடத்தில் பனை மரங்கள் வளர்க்கப்பட்டன.நாளிடைவில் பனை மரங்கள் நிறைந்த காடாக மாறியதால் பனங்காட்டூர் என்றாயிற்று. நாளிடைவில் அது மருவி காட்டூர் என்றாயிற்று.


மீண்டும் ஒரு பதிவில் கோவை பற்றி சுவையான விசயங்களுடன் சந்திப்போம்.
தொடரும்.....

கண்ணதாசனிடம் வாங்கிகட்டிய கருணாநிதி

0 comments

தமிழ் அகராதி,வாழும் வள்ளுவர்,ஐந்தமிழ் அறிஞர் ,வாழும் கம்பன்,உலகத்தமிழ் மாநாட்டு நாயகன்,முத்தமிழ் வித்தகர் முத்தமிழ் காவலர், அண்ணாவின் வாரிசே ,பெரியாரின் சீடரே இப்படியெல்லாம் கலைஞரை கட்சிகாரர்களும்,இன்றைய கவிஞர்களும் புகழ்ந்துதான் பார்த்திருப்பீர்கள்.அதுவும் திரையுலகத்தை சார்ந்தவர் என்றால் சொல்லவே வேண்டாம். ஆறுமுறை தேசிய விருது வாங்கியவராக இருந்தாலும் சரி,60 ஆண்டுகாலமாக பாட்டு எழுதுபவராக இருந்தாலும் இதே நிலைதான்.

 அது உலகத் தமிழ் மாநாடாக இருந்தாலும் சரி ,கவியரங்கமாக இருந்தாலும் இதே நிலைதான்.எடுத்துக் கொண்ட தலைப்பு எதுவாக இருந்தாலும் முகதுதி பாடிவிட்டுத்தான் வேறுவேலை. அன்று அரசனை புகழ்ந்து பாடி பரிசு பெற்று சென்றனர் சங்ககால புலவர்கள்.இந்த கால கவிஞர்கள் அதை குலத் தொழிலாக கொண்டு ஆட்சியில் உள்ளவர்களை புகழ்ந்து பாடி காரியத்தை சாதித்துக்கொள்கிறார்கள்.


நம் கவினரோ அதில் மிகவும் வித்தியசமானவர்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் கருணாநிதி கண்ணதாசனை பார்த்து "நீயெல்லாம் ஒரு கவிஞனா"? என்று கேட்டார்.6000 பாடல்களையும் ,5000 கவிதைகளையும் ,232 புத்தகங்களை எழுதியவரை பார்த்து இப்படி கேட்டார்.

கண்ணதாசனை பற்றி ஒரு வரியில் குறிப்பிட வேண்டும் என்றால் "போதையிலும் கவிபாடும் மேதை அவன்"

வட்டிக் கணக்கே வாழ்வென்று வைத்திருந்த செட்டி குலத்தில் தோன்றினாலும்,போதையிலும் கவிபாடும் மேதை அவன்.கருணாநிதி அப்படி கேட்டதன் விளைவு இந்த கவிதை. ஆயிரம் கவிஞர்கள் பாடிய துதி பாடல்கள் யாருக்கும் நினைவிருக்காது ஆனால் இந்தப் பாடல் எந்த காலத்திலும் 



நினைவிருக்கும் இந்த கவிதை.

அஞ்சாதா சிங்கமென்றும்
அன்றெடுத்த தங்கமென்றும்
பிஞ்சான நெஞ்சினர் முன்
பேதையர்முன் ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து

 தன்சாதி
 தன்குடும்பம்
 தான்வாழ தனியிடத்து
 பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
 பண்புடையான் கவிஞனெனில்
 நானோ கவிஞனில்லை
 என்பாட்டும் கவிதையல்ல.

 பகுத்தறிவை ஊர்க்குரைத்து
 பணத்தறிவை தனக்குவைத்து
 தொகுத்துரைத்த பொய்களுக்கும்
 சோடனைகள் செய்து வைத்து
 நகந்து நுனி உண்மையின்றி
 நாள்முழுதும் வேடமிட்டு
 மடத்தில் உள்ள சாமிபோல்
 மாமாய கதையுரைத்து

 வகுத்துணரும் வழியறியா
 மானிடத்து தலைவரென்று
 பிழைத்திருக்கும் ஆண்மையில்லா
 பேதையனே கவிஞனெனில்
 நானோ கவிஞனில்லை
 என்பாட்டும் கவிதையல்ல..

மீண்டும் இன்னொரு பதிவில் சந்திப்போம்.

யார் கடவுள்?

4 comments

எனக்குள் அடிக்கடி எழுகின்ற கேள்வி இது? "யார் கடவுள்" என்பது.ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இரண்டு வகையான இறை நம்பிக்கை உண்டு.ஒன்று பரீட்சை,வேலை,கல்யாணம்,திருட்டுப்போன நகை கிடைப்பது,பய நீக்கம் போன்ற அன்றாட உடனடி பலன்களுக்கு நம்பும் உருவ கடவுள் அது ஐயப்பனோ, முருகனோ, குழந்தை யேசுவோ என மனித மனத்தில் உருவாக்கி கொள்ளக்கூடிய நம்பிக்கையின் குவியமாக இருக்கலாம்.மற்றொரு கடவுள் உருவமில்லாத,இந்தப் பிரபஞ்சம் முழுவதும் விரிந்து கிடக்கின்ற உருவமற்ற ஒரு சக்தி.ஒரு முனையில் தெருமுனை பிளட்பாரத்தை அடைத்துக் கொள்ளும் பிள்ளையார்; மறுமுனையில் உலகத்தை படைத்ததாக சொல்லப்படும் இறைவன்.

இவ்விரு கடவுளுக்கு நடுவில்தான் மனிதன் குழம்புகிறான்.ஒன்றே தேவன்;அவன் உருவமற்றவன் ! என்று சொல்லும் மதங்களான கிறித்துவம்,இஸ்லாம் போன்றவற்றில் கூட மனித மனத்தால் அளவிட்டுக் கொள்ள ஏதுவாக ஓர் இறைத்தூதர் இயேசுநாதராகவோ, நபிகள் நாயகமாகவோ தேவைப்படுகிறார். கடவுள் நம்பிக்கை என்ற உணர்வு யாராலும் சொல்லிகொடுக்காமல் மனிதனுக்குள் ஏற்பட்ட ஒரு உணர்வாகும்.



Who is god


கடவுள் படைத்தாரா ? 


 கடவுள் மனிதரை படைத்தாரா என்ற கேள்விக்கு பதில் இருக்கிறதோ இல்லையோ கடவுளை படைத்தது மனிதன் என்பது மட்டும் உண்மை.அதிலும் மற்ற கடவுளைவிட பிள்ளையாருக்கும்,அம்மனுக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது.மற்ற எல்லா கடவுளுக்கும் குறிப்பிட்ட அவதாரமுண்டு. ஆனால் பிளேக் மாரியம்மன், மைதான மாரியம்மன், தண்டு மாரியம்மன், வேலை கொடுக்கும் பிள்ளையார், இரட்டை விநாயகர்,வினை தீர்க்கும் பிள்ளையார் என தெருவுக்கு ஒரு அவதாரம் எடுப்பது இவர்கள் மட்டும்தான். இப்படி மனிதனுக்கு வழிபட கண்டிப்பாக ஒரு உருவம் தேவைப்படுகிறது.

கி மு 483 ல் புத்தர் இறந்தபோது,அவர் உடல் எரிக்கப்பட்டதாம். அதன் சாம்பலை மற்ற நகரங்களுக்கு அனுப்பியதாக ஐதீகம்.புத்தரின் பல் ஸ்ரீலங்காவில் கண்டியில் மிகவும் ஆரதிக்கப்படுகிறது. ஏதோ ஒரு விதத்தில் வழிபட மனிதனுக்கு அடையாளம் தேவைப்படுகிறது. புதைத்த இடம், எரித்த இடம்,மறைந்த இடம்,பல்,செருப்பு.... இப்படி ஒரு அடையாள ஸ்தலம் இல்லையென்றல் மனித மனம் தவிக்கிறது.

உங்கள் வாழ்க்கை சீராக Highway ல் கார் செல்வதுபோல் சென்றால் பதசஞ்சலிலும் வேண்டாம்; பாதராயணரும் வேண்டாம்.ஆனால் அந்த பயணத்தில் சிறு பிரச்சனையை வரும்போதுதான் கடவுளை பற்றிக்கொள்ள மனம் பதப்பதக்கிறது. மனித மனத்தை பொறுத்தவரை, ஒரு கண் கண்ணாடி or ஒரு கைதடி போன்றது கடவுள்.

பக்தி vs ஆன்மீகம்

பக்திக்கும்,ஆன்மீகத்திற்கும் உள்ள வேறுபாடு பலருக்கும் தெரிவதில்லை.பக்தி ஒன்றை பற்றிக்கொண்டு திரும்ப,திரும்ப அதையே செய்வது.பல ஆண்டுகளாக பக்தி பாடல்களையும்,ஸ்லோகங்களும் பாடி பூஜை செய்யும் பலரை நமக்கு தெரியும். ஆனால் தாம் தினமும் சொல்லுகின்ற ,ஸ்லோகங்களுக்கு அர்த்தம் அவருக்கு தெரியாது.இது போன்ற பக்தியைத்தான் கடவுள் நம்பிக்கையென்று நம் வருங்கால சந்ததிக்கு சொல்லிக்கொடுக்கிறோம்.ஆன்மீகம் என்பது தன் நிலை உணர்தல்.தனக்குள் இருக்கும் கடவுளை தேடுவதாகும் (அகம் பிரம்மாஸ்மி)



Who is god

நம் மக்களிடையே எஞ்சி நிற்பது வெறும் பக்திதான்.மற்ற மொழிக்கில்லதா தனிச் சிறப்பு தமிழுக்கு உள்ளது.தமிழை வளர்த்ததில் பெரிய பங்கு பக்திக்கு உண்டு. தமிழிழ் உள்ள சிறப்பான நூல்கள் யாவும் பக்தி இலக்கியங்களே. தேவாரம்,திருவாசகம்,திருப்புகழ்,ஆண்டாள் பாசுரம் என தமிழை வளர்த்தது பக்திதான்.

இதுபோன்ற விஷயங்களை நாம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றிருக்க வேண்டும். ஆனால் அதை விடுத்து ஜோதிடம்,ஜாதகம்,வாஸ்து என மனிதரை பயப் படுத்துகின்றவற்றைதான் நாம் கட்டி காப்பாற்றுகின்றோம்.மெள்ள ஒரு மதத்தின் ஆரம்பகால காரணங்கள் விலகிப்போய்,அதன் சடங்குகள் மட்டும் மிச்சமிருக்கும்நிலை,எல்லா மததிற்க்கும் வெவ்வேறு அளவில் உண்டு.


கடவுளை எப்படி உணர்வது

நாம் எப்படி கடவுளை வணங்குகின்றோம்? வழியில் கடந்து செல்லும்போது வருகின்ற பிள்ளையார்;வண்டியில் செல்லும்போது ஒரு நொடிப் பொழுதில் கடக்கும் முருகன்;சினிமா அரட்டை அடித்துக்கொண்டு கடவுளை தரிசிக்க செல்வது;பிரசாதத்திற்காக கோயிலுக்கு செல்வது இவைதான் பக்தியா ?


திருச் சிற்றம்பலம்

மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரை ஆர் சுழற்கு என்
கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்
பொய்தான் தவிர்த்து உன்னைப் போற்றி சய சய போற்றி என்னும்
கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டு கொள்ளே.

கடவுளை பார்த்தவுடன் உடலும் மனமும் நடுங்கி உடலெல்லாம் வியர்த்து,கண்ணீர் ததும்ப்பி,பொய்களை தவிர்த்து கைகளை நெகிழ்ந்து கடவுளை கும்பிடுவதாக மணிக்கவாசகர் கூறுகிறார்.இந்த உணர்வு எனக்கு கடவுளை பார்த்தவுடன் வரவில்லையே? ஆனால், ஒரு கிரிக்கெட் போட்டியில் ஒரு ஓவருக்கு 19 ரன்கள் தேவைப்படும்போதும்,அந்த ஆட்டத்தை என்னுடைய அணி வெற்றிப் பெறும்போது என்னால் அதை உணர முடிகிறதே (மணிகவாசகருக்கு ஏற்பட்டதுபோல்) . அப்போது கிரிக்கெட்தான் கடவுளா? எது ஒன்று மனிதனை மனம் நெகிழ செய்கிறதோ அதுதான் கடவுளாக இருக்க முடியும்.


பாரதியின் பார்வை

நாம் எதையெல்லாம் கடவுள் வழிபாடு என்று நினைக்கிறோமோ அந்த எல்லாவற்றையும் உடைத்து எறிகிறான் பாரதி.

காவித் துணிவேண்டா,கற்றைச் சடை வேண்டா;
பாவித்தால் போதும் பரமநிலை யெய்துதற்கே.
சாத்திரங்கள் வேண்டா சதுமறைக ளேதுமில்லை;
தோத்திரங் ளில்லையுளந் தொட்டுநின்றாற் போதுமடா!
தவமொன்று மில்லையொரு சாதனையு மில்லையடா !
சிவமொன்றே யுள்ளதெனச் சிந்தை செய்தாற்போதுமடா !

கடவுளை உணர்வதற்கு எந்த வகையான உடையோ , அணிகலனோ தேவையில்லை.உன்னை உணர்ந்தால் போதும் என்கின்றான் பாரதி.எந்த தோத்திரங்கள் தேவையில்லை அவனை உன் மனதால் வணங்கி நின்றால் போதும் என்கிறான்.


ஆழ்வார்களின் பார்வை

கடவுள் தேவையா? தேவைபட்டால் அவர் எப்படிப்பட்ட என்ன வடிவம்? என்ற கேள்விக்கு எப்படி வேண்டுமானாலும் நினைத்துக்கொள்,எப்படி வேண்டுமானாலும் பெயர் சொல் எந்த வடிவத்தில் சிந்தித்துப் பார்கிறோமோ,அந்த வடிவம்தான் கடவுள் என்கிறார் பொய்கை ஆழ்வார்.

Who is god

தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்தது எம்பேர்மற்று அப்பேர் - தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையாதிருப்பாரே
அவ்வண்ணம் ஆழியானாம்.


மனிதனுக்கோ கடவுள்களுக்கோ பெயர்களோ வழிபாடோ தேவையில்லை,அன்றாட வாழ்வில் கடமையை செய்து நல்ல காரியங்களை செய்தால் போதும் என்கிறார் நம்மாழ்வார்.


அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனஅடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்


நாஸ்திகம் ?

கடவுள் இல்லை என்று சொல்வதை மிகவும் கிண்டலாக பார்க்கிறது இந்த சமூகம். என்னை பொறுத்தவரை ஒரு நாஸ்தீகனுக்கு அதிக மன வலிமை தேவைப்படுகிறது. அவனுடைய எல்ல செயலுக்கும் அவன்தான் பொறுப்பு.அவன் காலம்,நேரம்,விதி,ஜாதகம் என அதன் மேல் தன்னுடைய தவற்றை போட முடியாது. நாஸ்திகன் எல்லாவற்றையும் அறிவால் அறிய முயல்கிறான். நாஸ்திகன் கடவுளை எதிர்த்தது விட,நாஸ்திகனை கடவுள் நம்பிகை உள்ளவர்கள் எதிர்த்ததுதான் அதிகம்.நாஸ்திகமும் ஒரு மதம்தான்.

மீண்டும் என்னுடைய முதல் கேள்விக்கே வருவோம். யார் கடவுள்?அவர் எப்படி இருப்பார்? இந்த ஒரு பதிவில் என்னால் என்னுடைய எல்லா கருத்தையும் சொல்ல இயலவில்லை. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லுங்கள். என்னுடைய அடுத்த பதிவில் இந்த கேள்விக்கான என் கருத்துக்கள் தருகிறேன்.

தொடரும் ...

தெரிந்த பாடல் தெரியாத தகவல்கள்

0 comments


இந்தப் பதிவில் MGR ம் கண்ணதாசனும் இணைந்து பணியாற்றிய இரண்டு சுவையான பாடல்களை பார்ப்போம்.கண்ணதாசனும் MGR ம் மிகச்சிறந்த நண்பர்கள்.இருவரும் ஒரே கட்சியில் பணியாற்றியவர்கள்.1972 ம் ஆண்டு பொது இடங்களில் குடிப்பதற்கான தடை நீக்கப்பட்டிருந்தது அதனால் ஆண்கள் குடிபோதையில் அடிமையாகி குடும்பங்களை மறந்து திரிகிறார்கள் என்று நிறைய பெண்கள் MGR இடம் முறையிட்டனர்.MGR அந்த காலத்தில் தன் படங்களில் சமூக பிரச்சனையை தீர்ப்பது போன்ற காட்சியில் அதிகம் நடிப்பார்.

தன் அரசியல் பிரவேசத்திற்கு சினிமாவை ஒரு மிகச் சிறந்த கருவியாக MGR பயன்படுத்தினார்.MGR குடிப்பழக்கத்திற்கு எதிரான தன் கருத்தை படத்தில் பாடலாக வைக்க வேண்டும் என நினைத்தார்.இந்த பாடலை நம் கவிஞரை விட யாராலும் எழுத முடியாது என்று நினைத்து அவரிடம் இந்த பாடலை எழுத சொன்னார்.நம் கவிஞரோ எப்போதும் போதையில் இருப்பவர் அதனால் தான் எப்படி இந்த பாடலை எழுத முடியும் என யோசித்தார்.இருந்தாலும் MGR ன் அன்புக் கட்டளையும் தட்ட முடியவில்லை.

அந்த சூழ்நிலையில் அவர் எழுதிய பாடல்தான் "சிலர் குடிப்பவர் போலே நடிப்பார் சிலர் நடிப்பவர் போலே குடிப்பார்" எனத் தொடங்கும் பாடல். இந்தப் பாடலில் குடியால் ஏற்படுகின்ற தீமையும் சொல்லியிறுப்பார் அதே சமயம் குடியால் ஏற்படுகின்ற அனுபவத்தையும் மறைமுகமாக சொல்லியிறுப்பார்.

படம் : சங்கே முழங்கு  
இசை : MSV  
பாடியவர் : TMS  

Kannadasan


சிலர் குடிப்பதுபோலே நடிப்பார் சிலர் நடிப்பதுபோலே குடிப்பார்
சிலர் பாட்டில் மயங்குவார் சிலர் பாட்டலில் மயங்குவார்
மதுவுக்கு ஏது ரகசியம் அந்த மயக்கத்தில் எல்லாம் அவசரம்
மதுவில் விழுந்த வார்த்தையை மறுநாள் கேட்பது அவசியம்

நானமில்லை வெட்கமில்லை போதையேறும்போது
நல்லவனும் தீயவனே கோப்பையேந்தும்போது
புகழிலும் போதையில்லையே பிள்ளை மழழையில் போதையில்லையே
காதலில் போதையில்லையே நெஞ்சில் கருணையில் போதையில்லையே

மனம்,மதி,அறம்,நெறி தரும் சுகம் மதுதருமோ
நீ நினைக்கும் போதைவரும் நன்மைசெய்துபாரு
நிம்மதியை தேடி நின்றால் உண்மை சொல்லிப்பாரு


கவிஞரை பொறுத்தவரை குடிப்பது என்பது தனி மனித ஒழுக்கம் சார்ந்த பிரச்சனை அது எந்த விதத்திலும் சமுதாயத்தை பாதிக்காது என்பது அவரது கருத்து. எல்லாவற்றிலும் ஒரு போதையுண்டு. பணம் பொருள்,புகழ் போன்றவையும் ஒரு வகையான போதையே அதனால் குடிபோதை பெரிய தவறல்ல என்பது அவரது கருத்து.

MGR அவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்.1963ல் அவர் திமுக வில் தீவிரமாக பணியாற்றி கொண்டிருந்தார்.திமுக என்பது கடவுள் நம்பிக்கையில்லாத கடவுளுக்கு எதிரான ஒரு கட்சியாக வடிவெடுத்திருந்த சமயம் அது.அப்போது MGR ன் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் அவர் கட்சியின் கொள்கையை மீறுகிறார் என்று குற்றம் சாட்டி அவரை கட்சியின் தலைமையில் சொல்லி கட்சியை விட்டு அகற்ற பார்த்தனர்.

அந்த இக்கட்டான சூழ்நிலையில் மற்றவர்களுக்கு பாடம் புகுத்துவது போன்ற ஒரு பாடல் எழுதுமாறு கண்ணதாசனிடம் கேட்டார்.சூழ்நிலைக்கு பாட்டு எழுதுவது என்பது நம் கவிஞருக்கு கைவந்த கலை.அப்படி அவர் எழுதிய பாடல்தான் "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே" என்று தொடங்கும் பாடல்.

இயக்குனர் : சங்கர்  
இசை: விஸ்வநாதன் ,ராமமூர்த்தி  
படம் : பணத்தோட்டம் (1963)  

Kannadasan


என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிப்படும் மயங்காதே
ஒரு தலைவனிருக்கிறான் மயங்காதே

பின்னாலே தெரிவது அரிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன்வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே போராடு

உலகத்தில் திருடர்கள் சரிபாதி
ஊமைகள் குருடர்கள் அதில்பாதி
கழகத்தில் பிறப்பதுதான் மீதி
மனம் கலங்காதே மதிமயங்காதே


இந்தப்பாடலில் தனக்கு எதிராக என்னதான் நடந்தாலும் கடைசியில் நியாயம்தான் ஜெயிக்கும் என்பதுபோல் பாடல் எழுதியிருப்பர். " ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே" என்ற வரிகள் வரும் காட்சியில் பின்னாலே கோபுரங்களை பார்த்து MGR கை காட்டுவது போல் அமைத்திருக்கும் ( அது கடவுளை மறைமுகமாக குறிப்பதாக காட்சியமைதிருப்பார் ) "பின்னாலே தெரிவது அரிச்சுவடு முன்னாலே இருப்பது அவன் வீடு" போன்ற வரிகள் இரண்டு அர்த்தங்களுடன் எழுதப்பட்டவை. இவ்வாறு MGR ன் பல இக்கட்டான சூழ்நிலைக்கு ஏற்றவாறு காலத்தால் அழியாத பல பாடல்களை தந்தவர் கண்ணதாசன்.அதனால்தான் அவரை MGR தமிழ்நாட்டின் அரசவை கவிஞராக்கி அழகுப்பார்த்தார்.

மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்.

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு

9 comments


இந்தப் தலைப்பை பார்த்தவுடன் நான் எதை பற்றி எழுதப் போகிறேன் என்று புரிந்திருக்கும். கண்ணதாசனின் வாழ்வில் மது எவ்வளவு பெரிய அங்கமாக இருந்தது என்பதே பற்றி பார்ப்போம். 1972 /73 ல் பிரபல நடிகரும் / தயாரிப்பாளருமான பாலாஜி அவர்கள் இந்தியில் வெளிவந்த துஷ்மன் படத்தை தமிழில் நீதி என்று ரீமேக் செய்தார்.அந்த படத்தில் ஒரு காட்சியில் ஹீரோ மதுபாட்டிலை கீழே போட்டு உடைத்து இனிமேல் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்வது போன்ற ஒரு சூழ்நிலைக்கு பாடலை எழுதுமாறு கேட்டார்.

கவிஞரோ யோசித்துவிட்டு "நாளை முதல் குடிக்க மாட்டேன்" என்று தொடங்கும் பாடலை எழுதினார்.பாலாஜி பாடலை பார்த்து விட்டு ஹீரோ உடனே திருந்துவதாக இருக்க வேண்டும் நீங்கள் நாளை முதல் குடிக்க மாட்டேன் என்று எழுதியிருக்கீங்க என்றார்.அதற்கு கவிஞரோ நீயும் ஒரு குடிகாரன் நானும் ஒரு குடிகாரன். எந்த குடிகாரனவது இன்று முதல் குடிக்க மாட்டேன் என்று சொல்லுவானா? என்று கேட்டார் அதற்கு பாலாஜியும் ஒத்துக்கொண்டார். 

 இதோ அந்த பாடல் வரிகள்



Kannadasan,Sivaji



நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்
இன்னைக்கு ராத்திரிக்கு தூங்க வேண்டும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்

கடவுள் என் வாழ்வில் கடன்காரன்
கவலைகள் தீர்ந்தால் கடன்தீரும்
ஏழைகள் வாழ்வில் விளையாடும்
இறைவன் நீ கூட குடிகாரன்

போதை வந்தபோது புத்தியில்லையே
புத்தி வந்தபோது நண்பரில்லையே

இந்தப்பாடல் கடவுளை பற்றி சில தவறான வரிகள் இருப்பதால் அந்தக் காலத்தில் மலேசிய வானொலியில் தடை செய்யப்பட்டது.


        ஒரு சமயம் கண்ணதாசன்,விஸ்வநாதன் ராமமூர்த்தி மற்றும் பீம்சிங் ஆகியோர் பழனி படத்தின் பாடலை எழுதுவதற்காக ஸ்டுடியோவில் உட்கார்ந்திருந்தனர் அங்கே வேலை செய்யும் ஒரு பையன் ஒரு foregin whiskey பாட்டிலை எடுத்துக்கொண்டு சென்றான்.நம் கவிஞரோ அந்த பாட்டில் என்ன விலை என்றார்.1500 ரூபாய் என்றார் அவரிடம் வெறும் 500 ரூபாய்தான் இருந்தது உடனே அவருடைய அண்ணனுக்கு போன் செய்து எனக்கு 1000 ரூபாய் முன் பணமாக இந்த படத்திற்கு பாட்டு எழுத கேட்டார்.அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அவருடைய அண்ணன் AL ஸ்ரீனிவாசன். குடிப்பதற்கு பணம் தர மாட்டேன் என்று சொல்லி மறுத்து விட்டார்.

 கோபத்துடன் வந்து பாடல் எழுத அமர்ந்தார்.வழக்கம்போல் படத்தின் சூழ்நிலையும் அவரின் வாழ்க்கை சூழ்நிலையும் ஒன்றாக அமைந்தது. கோபத்தில் எழுதினாலும் அந்த பாடல் என்றும் நம் மனதில் மறவாமல் இருக்கிறது. 



Kannadasan,Sivaji


படம் : பழனி (1965)



அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே
ஆசை கொள்வதில் அர்த்தமென்னடா காசில்லாதவன் குடும்பத்திலே
தாயும் பிள்ளையும் ஆனபோதிலும் வாயும் வயிறும் வேறடா
சந்தை கூட்டத்தில் வந்த மந்தையில் சொந்தமென்பதேதடா 

மனிதசாதியில் துயரம் யாவுமே மனதினால் வந்த நோய்யடா
வாழும் நாளிலே கூட்டம்கூட்டமாய் வந்துசேர்கிறார் பாரடா
கை வறண்ட வீட்டிலை உடைந்த பானையை 
மதித்து வந்தவர் யாரடா மதித்து வந்தவர் யாரடா

பணத்தின் மீதுதான் பக்தி என்றபின் பந்த பாசமே ஏனடா
பகைக்கும் நெஞ்சிலை அணைக்கும் யாவரும் 
அண்ணன் தம்பிதானடா அண்ணன் தம்பிதானடா

இன்னொரு பதிவில் சந்திப்போம்.

காலந் தீண்ட கண்ணதாசன்

0 comments

இந்த பதிவில் மீண்டும் ஒரு காலத்தால் அழியாத மக்கள் நெஞ்சில் நிலைத்து நின்ற பாடல்கள் உருவானதை பார்போம். கெளரவம் படத்தின் தயாரிப்பாளர் 1973ம் ஆண்டு படத்தின் பாடல்களை எழுதவதற்காக கண்ணதாசனுக்கு முன் பணம் கொடுத்து புக் செய்திருந்தார் ஆனால் கவினரோ தன் வேலைகளை எல்லாம் மறந்து மலேசியாவில் வாழ்க்கையை ரசித்து கொண்டு இருந்தார்.

இது போன்று தன் வேலையை மறந்து சரியான நேரத்தில் பாடல்களை தராமல் தாமதப்படுத்துவார் என்பது கண்ணதாசனின் மீதான பரவலான கருத்து. அந்த சமயத்தில் அவருடைய உதவியாளர் படத்தின் தயாரிப்பாளரை சந்தித்து அவர் எப்போதும் இப்படிதான் தாமத்தப் படுத்துவார் என்று கவிஞரின் குறைகளை கூறி தனக்கு அந்த வாய்ப்பை தருமாறு கேட்டார் ( அவர் இப்போது பெரிய தயாரிப்பாளர்) ஆனால் தயாரிப்பாளரோ கண்ணதாசனே பாடல்களை எழுதட்டும் என்று காத்திருந்தார். 

 கவிஞர் மலேசியாவிலிருந்து வந்தவுடன் இந்த செய்தியை கேள்விப்பட்டு மிகவும் மனவருத்தம் அடைந்தார். தான் தூக்கி வளர்த்து ஆளாக்கிய ஒருவர் தன்னை கவிழ்க்க பார்ப்பதை எண்ணி மனவேதனை அடைந்தார்.அடுத்த நாள் இயக்குனர் பாடலின் சூழ்நிலையை விளக்கினார். தான் எடுத்து வளர்த்த தன் வளர்ப்பு மகன் தன்னை எதிர்த்து நிற்கிறான் என்றார் இயக்குனர்.

வழக்கம்போல் தன் வாழ்கையின் வழியை அந்த படத்தின் பாடலில் எழுதியிருப்பார்.படத்தின் சூழ்நிலையை மறந்து இந்த சூழ்நிலையை மனதில் நினைத்தால் ஏதோ தனது உதவியாளர் செய்த துரோகத்திற்காக எழுதியது போலவே முழுப் பாடலும் இருக்கும். காலத்தால் அழியாத இந்த இரண்டு பாடல்களும் என்றும் மறக்க முடியாதவை.

 இதோ நான் ரசித்த வரிகள்

படம் : கெளரவம் 


Kannadasan,Sivaji



நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா
காலம் மாறினால் கெளரவம் மாறுமா
அறிவை கொடுத்ததோ துரோணரின் கெளரவம்
அவர்மேல் தொடுத்ததோ அர்சுனன் கெளரவம்

நடந்தது அந்தநாள் முடிந்ததா பாரதம் 
நாளைய பாரதம் யாரதன் காரணம்
வளர்த்த என் கண்ணனோ தந்தையின் நெஞ்சிலே
மாறும் அவதாரமே இதுதான் உலகிலே.


ஆனால் இவ்வளவு நடந்தாலும் எல்லாவற்றையும் மறந்து மன்னித்து அந்த உதவியாளரை மீண்டும் சேர்த்து கொண்டார்.







பாலுட்டி வளர்த்த கிளி பழங்கொடுத்து பார்த்தகிளி
நான் வளர்த்த பச்சைகிளி நாளை வரும் கச்சேரிக்கு
சட்டமும் நான் உரைத்தேன் தைரியமும் நான் கொடுத்தேன்
பட்டம் மட்டும் வாங்கி வந்து பாய்ந்து செல்ல பார்க்கிறது

செல்லமா எந்தன் செல்லமா

 நீதிக்கே துணிந்து நின்றேன் நினைத்ததெல்லாம் ஜெயித்து வந்தேன்
வேதனைக்கு ஒரு மகனை வீட்டிலே வளர்த்து வந்தேன்
ஆண்டவன் சோதனையோ யார்கொடுத்த போதனையோ
தீயிலே இறங்கிவிட்டான் திரும்பி வந்து கால் பணிவான்

கண்ணதாசன் எதையும் மனதில் வைத்து பழிவாங்க வேண்டும் என்று எவரையும் நினைத்ததில்லை. தான் நினைத்ததை பாட்டில் அழகாக வெளிபடுத்தும் அற்புத ஆற்றல் பெற்ற காலந் தீண்ட கவிஞர் நம் கண்ணதாசன்.

விஸ்வரூபத்திற்கு அரசின் தடை சரியா ?

0 comments

விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிப்பது சரியா என்பதை பற்றி எனது கருத்துக்களை இந்த பதிவில் காண்போம். முதலில் இந்த படம் இந்தியாவை பற்றியோ அல்லது தமிழ் நாட்டை பற்றிய படமில்லை.இது உலக தீவிரவாதத்தை பற்றியது குறிப்பாக ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்காவை பற்றியது. ஆனால் அமெரிக்காவில் எந்த வித எதிர்ப்பு இல்லாமல் வெற்றிகரமாக ஓடுகிறது.

இந்த படத்தில் தீவிரவாத தலைவன் தமிழ் பேசுகிறார்( மக்களுக்கு புரியவேண்டும் என்பதற்காக) அவரை தவிர அனைவரும் அரபிக் பேசுகிறார்கள். ஆப்கானிஸ்தானில் வாழும் தீவிரவாதிக்கு எப்படி தமிழ் தெரியும் என்ற கேள்வி எழக்கூடாது என்பதற்காக (லாஜிக் மீராக்கூடாது ) நான் தமிழ்நாட்டில் 1 ஆண்டு இருந்தேன் என்று டயலாக் வரும்.அதற்காக படத்தை எதிர்ப்பது என்பது மிகவும் வருத்தப்படக் கூடிய ஓன்று.இது ஒன்றும் புதிய காட்சியல்ல.1992 ல் வெளிவந்த ரோஜாவில் தீவிரவாத தலைவன் தமிழில் பேசுவான்.எப்படி தமிழ் தெரியும் என்று கேட்கும் போது நான் கோயம்புத்தூர் Agriculture collegeல் படித்தேன் என்று சொல்லுவான்.இந்த மாதிரி லாஜிக் மீறாமல் படம் எடுக்க வேண்டும் என்பவருக்குதான் இந்த மாதிரியான எதிர்ப்புகள் வரும்.


Vishwaroopam


இந்த படத்தை எதிர்ப்பது நியாயம் என்றால் தமிழ் நாட்டில் கிட்டதட்ட 500 படங்களை கடந்த 10 ஆண்டுகளில் தடை செய்திருக்க வேண்டும் .எல்ல படங்களிலும் அரசியல்வாதி ஊழல் செய்வது போல், போலீஸ் லஞ்சம் வாங்குவது போல் காட்சிகள் இடம்பெறுகின்றன.எந்த அரசியல் வாதியும் லஞ்சம் வாங்கியதாக நீதிமன்றத்தில் நிருபிக்க படவில்லை அப்படியிருக்க எந்த ஆதாரத்தில் இந்த படங்கள் வெளிவந்தன ஏன் யாரும் இந்த படங்களை எதிர்க்கவில்லை?


இப்படி ஒவ்வொருவரும் எதிர்த்தல் எந்த படத்தையும் எடுக்க முடியாது.நூறு சதவித மக்களையும் சமாதான படுத்தி ஒரு செயல் செய்வது இயலாத காரியம். கூடாங்குலத்தையும், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டையும் மக்கள் எதிர்த்தாலும் அரசு அதை கண்டு கொள்ளாமல் சட்டம் இயற்றி செயல்படுகிறது. 4 கோடி வியாபாரிகளின் எதிர்ப்பை மீறி அரசு செயல்பட்டு கொண்டுதான் இருக்கிறது.


Vishwaroopam


எந்த ஒரு நிகழ்சியையோ அல்லது குறிப்பிட்ட காலத்தை பற்றி சொல்லும்போது அதை சார்ந்து நடந்த முக்கிய நிகழ்வுகளை கண்டிப்பாக குறிப்பிட்ட வேண்டும் என்பது கமலின் வாதம்.உதாரணமாக தசாவதாரத்தில் 17 நூற்றாண்டை குறிப்பிடும்போது சைவ வைணவ சண்டையை காட்டியுறுப்பார். ஹேராமில் சுதந்திர போராட்டத்தை குறிப்பிடும்போது கல்கத்தாவில் நடந்த இந்து முஸ்லிம் வன்முறையை காட்டியிறுப்பார் இப்படி நிறைய சொல்லி கொண்டே போகலாம்.


ஹிட்லரை பற்றி படம் எடுத்தால் அவருடைய கொடுமையை காட்டித்தான் ஆகவேண்டும்.இவர்கள் இப்பொது செய்திருக்கும் தடை எப்படி இருக்கு என்றால் நீ ஹிட்லரை பற்றி படம் எடுக்கலாம் ஆனால் அவனை ரொம்ப நல்லவன் என்று காட்ட வேண்டும் என்பதுபோல் உள்ளது.


இந்த படத்தில் அமெரிக்காவையும் கமல் சாடியிருப்பார்.இந்த வழக்கில் படத்தின் மேல் இடப்பட்ட தடை தவறு என்று நிரூபிக்க பட்டால் இந்த தடையால் ஏற்பட்ட இழப்பை ( பணத்தை) அரசாங்கம் கொடுக்குமா? உலக வரலாற்றில் ஒரு மொழியில் எடுக்கப்பட்ட படம் அந்த மொழி மக்கள் வசிக்கும் இடத்தில் தடை செய்யப்பட்டு வெளி நாடுகளில் ஓடுவது இதுவே முதல் முறை .

 
  • தமிழ் ஆவணம்