உண்மையில் கண்ணகி மதுரையை எரித்தாளா?

    சமீபத்தில் S ராமகிருஷ்ணன் அவர்களின் காணொலியை பார்க்க நேரிட்டது. அதில் அவர் சிலப்பதிகாரத்தை பற்றியும் கண்ணகி பற்றியும் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்தார். சிலப்பதிகார கதையை தவிர்த்து கண்ணகி பற்றி எந்த விஷயமும் எனக்கு தெரியாது.கண்ணகி என்பது வெறும் கற்பனை பாத்திரமா? இல்லை உண்மையில் அவள் வாழ்த்தாளா? என்ற கேள்வி எனக்குள் கண்ணகி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலை தூண்டியது.கண்ணகி பற்றி நான் சேகரித்த விஷயங்களை இந்த பதிவில் தருகிறேன்.

மதுரையை எரித்தாளா:

    கண்ணகி மற்றும் கோவலன் கதை எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே(அதனால் மீண்டும் அதை நான் இங்கு எழுதவில்லை). சிலப்பதிகாரத்திற்கு என்று ஒரு தனி சிறப்புண்டு. உலகில் உள்ள எந்த இலக்கியமும் வணிகரை பேசியது கிடையாது, ஆனால் சிலப்பதிகாரத்தில் மட்டும்தான் வணிகரை பற்றியும், அவர்களின் வாழ்க்கை முறை பற்றியும் விரிவாக எழுதப்பட்டுள்ளது.கோவலனும் மாதவியும் கூட வணிக குலத்தை சேர்ந்தவர்கள்தான்.கோவலன் இறந்தவுடன், தன் கணவருக்கா பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனிடம் வாதாடி,கோவலன் குற்றமற்றவன் என்பதை நிருபித்துவிட்டு பின் கோபத்தில் மதுரையை எரித்தாள் என்பதுதான் வரலாறு என்றாலும், ஒரு சிலர் அதை வேறு கோணத்தில் பார்க்கிறார்கள்.

    கோவலன் வணிக குலத்தை சேர்த்தவன், அவன் கொல்லப்பட்ட செய்தியை அறிந்தவுடன்,மதுரையில் உள்ள வணிகர்கள் கோபப்பட்டு, தங்கள் எதிர்ப்பை காட்டும் விதமாக சில இடங்களில் தீ வைத்தாகவும்,அந்த செய்தி மதுரை முழுவதும் பரவியதாகவும், நாளிடைவில் அந்த செய்தி மருவி கண்ணகி மதுரையை எரித்தாள் என்று கூறப்பட்டதாகவும் ஒரு கருத்து உண்டு.

அழிக்கப்பட்ட கண்ணகியின் சிலைகள்:

   கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பு எழுதப்பட்டது சிலப்பதிகாரம். கண்ணகிக்கு கேரளா,இலங்கை என்று பல இடங்களில் கோவில்கள் உண்டு, ஆனால் தமிழ்நாட்டில் எங்கும் கோவில்கள் கிடையாது என்ற செய்தி என்னை வியப்பில் ஆழ்த்தியது.( மதுரையில் மட்டும் செல்லத்தம்மன் என்ற ஒரே ஒரு கண்ணகி கோவில் மட்டும்தான் உள்ளது). மனிதன் ஆதிகாலத்தில் இயற்கையையும், தன் முன்னோர்களையும் தெய்வமாக வணங்கினான். அந்த மாதிரியான தெய்வங்கள் நாட்டார் தெய்வங்கள் என்று அழைக்கப்பட்டன.

    குறிப்பாக பெண் தெய்வங்கள் யாவும் வஞ்சிக்கப்பட்ட பெண்களாகும். அவர்களின் தியாகத்திற்காக அவர்கள் தெய்வமாக்கப்பட்டார்கள். இப்படி பல பெண் தெய்வங்கள் தமிழ்நாட்டிலுண்டு. அப்படியானால் கண்ணகிக்கு என்று கண்டிப்பாக பல கோவில்கள் இருந்திருக்க வேண்டும், ஆனால் இந்த சிறு தெய்வங்கள் யாவும் பிற்காலத்தில் எழுச்சி பெற்ற சைவ,வைணவ,சமண, பௌத்த கடவுள்களால் சூரையாடப்பட்டன.சில தெய்வங்கள் பெரிய தெய்வமாக வேறு பெயர்களாக மாற்றப்பட்டன.கண்ணகிக்கும் அதே நிலைதான் ஏற்பட்டது.

கண்ணகி கோவில்கள் பத்தினி என்ற பெயரில் பெண் தெய்வமாக புத்த துறவிகளாலும், கண்ணகி அம்மனாக தமிழர்களால் இலங்கையில் வழிபடப்படுகிறது. கேரளாவில் கொடுங்கநல்லூர் பகவதி ,மங்கள தேவி ,அட்டுகல் அம்மன் என்ற பெயரில் வழிபடப்படுகிறது.

செல்லத்தம்மன் கோவில்



Chellathamman
தமிழ் நாட்டில் உள்ள ஒரே கண்ணகி கோவில் இந்த செல்லத்தம்மன் கோவிலாகும்.

மங்கள தேவி கண்ணகி கோவில்:

   இந்த கோவில் தமிழ்நாடு,கேரளா எல்லையில் உள்ள வண்ணதிபாறை என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த கோவில் கடல் மட்டத்திலிருந்து 4 ஆயிரத்து 380 அடி உயரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் மீது அமைந்துள்ளது.கண்ணகியை தெய்வமாக வணக்கிய வேடுவர்கள் சித்திரா பௌர்ணமியன்று விழா எடுத்தனர். அதன் அடிப்படையில் தற்போதும் அன்று ஒருநாள் மட்டும் விழா நடக்கிறது.

mangaladevi temple

    மதுரையை எரித்தபின் தென்திசை வழியாக 14 நாள் நடந்து இவ்விடத்துக்கு வந்தாள். அப்போது விண்ணுலகிலிருந்து புஷ்பக விமானத்தில் வந்த கோவலன், கண்ணகியை அழைத்துச் சென்றான். இதைக்கண்டு ஆச்சரியமடைந்த மலைவாழ் மக்களான வேடுவர்கள்,அவளை தெய்வமாக பாவித்து "மங்கள தேவி" என்ற பெயரில் வணங்கினர்.

    ஒரு சமயம் சேரன் செங்குட்டுவன், இப்பகுதிக்கு வேட்டையாட வந்தான். அவனிடம் மக்கள் தாங்கள் கண்ட அதிசயத்தைக் கூறினர். மகிழ்ந்த மன்னன் , இங்கு வந்தது கண்ணகி என அறிந்து மகிழ்ந்தான். சிலப்பதிகாரம் சொல்லும்  ' "உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்" ' என்னும் வாசகத்துக்கு ஏற்ப , இங்கு அவளுக்கு கோயில் எழுப்ப விருப்பம் கொண்டான். இதற்காக இமயத்திற்கு சென்று கல் எடுத்து , அதை கங்கையில் நீராட்டி , கண்ணகிக்கு சிலை வடித்தான் , இங்கு கோயில் கட்டி சிலையைப் பிரதிஷ்டை செய்தான்.

கொடுங்கநல்லூர் பகவதி கோயில்

Kodungallur Bhagavathy

   இந்த கோவில் கேரளாவில் உள்ள திரிசூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் குறும்பா பகவதி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அம்மன் எட்டு கைகளுடன் காட்சியளிக்கிறாள். அசுரரின் தலை ,வாழ் , மணி , சிலம்பம் என்று ஒவ்வொரு கையில் ஒரு பொருளை ஏந்தி உக்கிரமாக காட்சியளிக்கிறாள்.இந்த கோயில் சேரன் செங்குட்டுவனால் கண்ணகிகாக கட்டப்பட்ட கோயிலாகும். அம்மன் கையில் உள்ள சிலம்பம்தான், கண்ணகியின் கால் சிலம்பு என்று கூறுகிறார்கள் .

அட்டுகால் கோயில் :

   கண்ணகி கடைசியாக வந்து அமர்ந்த இடம் கொடுங்கநல்லூர் பகவதி கோயில். அந்த கோயிலுக்கு வரும் வழயில் அட்டுகால் வந்தடைந்தாள் கண்ணகி. அங்கு சிறுமியின் உருவம் எடுத்த கண்ணகி, அங்குள்ள ஆற்றை கடக்க உதவுமாறு அங்குள்ள ஒரு வயதானவரை கேட்டதாகவும் , அவர் அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது. அந்த பெண் அந்த இடத்திலிருந்து மறைந்ததாகவும், அந்த முதியவரின் கனவில் வந்து தனக்கு ஒரு கோயில் கட்ட சொன்னதாகவும் , அவர் கட்டிய கோயில்தான் அட்டுகால் கோயிலாகும் .

கண்ணகி அம்மன் - இலங்கை :

Vatrappalai-Kannaki-Amman-Kovil

   வற்றாப்பாளை கண்ணகி அம்மன் கோயில் முல்லைதீவு மாவட்டத்தில் உள்ளது. மதுரையை எரித்த பின் கண்ணகி பத்தாவது இடமாக இலங்கையில் ஓய்வெடுத்த இடமாக அறியப்படுகிறது. இலங்கையில் உள்ள எல்லா பக்தர்களும் வைகாசி விசாகம் தேதியில் அம்மனுக்கு சர்க்கரை பொங்கல் படைத்து தங்கள் வேண்டுதலை அம்மனிடம் முறையிடுவார்கள்.

பத்தினி கோவில் :

pattini

   சிங்கள புத்த துறவிகளை பொறுத்தவரை பத்தினி என்பது புத்த மதத்தை காக்கும் தெய்வமாகும். சிங்கள மத கருத்துப்படி, பத்தினி அம்மன் கண்ணகியின் வடிவமெடுத்து, மூன்று கண்களுடன் பிறந்த கொடிய பாண்டிய மன்னனை அழித்தாக கருதப்படுகிறது. முதலாம் கஜபாதான் இலங்கைக்கு சிலப்பதிகாரத்தையும், கண்ணகியையும் அறிமுகம் செய்தார். அப்போது கண்ணகி கிரி அம்மா (Milk mother) என்ற பெயரில் வணங்கப்பட்டாள். இலங்கையில் கண்டி,முல்லைதீவு,மெடகொட,பனாமா,மாது,தேடிகமா,கடுவெல போன்ற பல இடங்களில் கோவில்கள் உள்ளன.

இவ்வாறு கேரளா,இலங்கை போன்ற இடங்களில் கொண்டாடப்படும் ஒரு தமிழ் பெண்ணிற்கு, ஒரு கோவில் கூட இல்லாததும்,இருந்த ஒரு சிலையை அகற்றிய பெருமை தமிழகத்திற்க்கு மட்டுமே சாரும்.

வேர்களையும், பழமையையும் தொலைத்துவிட்டு வெறும் மேற்கத்திய மோகத்தில் வாழ்வது எந்த பயனையும் நமக்கு தராது.
நமக்கென்று உள்ள பழக்கவழக்கத்தையும் பாரம்பரியத்தை மீட்டு எடுப்போம்.

0 comments:

Post a Comment

 
  • தமிழ் ஆவணம்