கண்ணதாசனிடம் வாங்கிகட்டிய கருணாநிதி

0 comments

தமிழ் அகராதி,வாழும் வள்ளுவர்,ஐந்தமிழ் அறிஞர் ,வாழும் கம்பன்,உலகத்தமிழ் மாநாட்டு நாயகன்,முத்தமிழ் வித்தகர் முத்தமிழ் காவலர், அண்ணாவின் வாரிசே ,பெரியாரின் சீடரே இப்படியெல்லாம் கலைஞரை கட்சிகாரர்களும்,இன்றைய கவிஞர்களும் புகழ்ந்துதான் பார்த்திருப்பீர்கள்.அதுவும் திரையுலகத்தை சார்ந்தவர் என்றால் சொல்லவே வேண்டாம். ஆறுமுறை தேசிய விருது வாங்கியவராக இருந்தாலும் சரி,60 ஆண்டுகாலமாக பாட்டு எழுதுபவராக இருந்தாலும் இதே நிலைதான்.

 அது உலகத் தமிழ் மாநாடாக இருந்தாலும் சரி ,கவியரங்கமாக இருந்தாலும் இதே நிலைதான்.எடுத்துக் கொண்ட தலைப்பு எதுவாக இருந்தாலும் முகதுதி பாடிவிட்டுத்தான் வேறுவேலை. அன்று அரசனை புகழ்ந்து பாடி பரிசு பெற்று சென்றனர் சங்ககால புலவர்கள்.இந்த கால கவிஞர்கள் அதை குலத் தொழிலாக கொண்டு ஆட்சியில் உள்ளவர்களை புகழ்ந்து பாடி காரியத்தை சாதித்துக்கொள்கிறார்கள்.


நம் கவினரோ அதில் மிகவும் வித்தியசமானவர்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் கருணாநிதி கண்ணதாசனை பார்த்து "நீயெல்லாம் ஒரு கவிஞனா"? என்று கேட்டார்.6000 பாடல்களையும் ,5000 கவிதைகளையும் ,232 புத்தகங்களை எழுதியவரை பார்த்து இப்படி கேட்டார்.

கண்ணதாசனை பற்றி ஒரு வரியில் குறிப்பிட வேண்டும் என்றால் "போதையிலும் கவிபாடும் மேதை அவன்"

வட்டிக் கணக்கே வாழ்வென்று வைத்திருந்த செட்டி குலத்தில் தோன்றினாலும்,போதையிலும் கவிபாடும் மேதை அவன்.கருணாநிதி அப்படி கேட்டதன் விளைவு இந்த கவிதை. ஆயிரம் கவிஞர்கள் பாடிய துதி பாடல்கள் யாருக்கும் நினைவிருக்காது ஆனால் இந்தப் பாடல் எந்த காலத்திலும் நினைவிருக்கும் இந்த கவிதை.

அஞ்சாதா சிங்கமென்றும்
அன்றெடுத்த தங்கமென்றும்
பிஞ்சான நெஞ்சினர் முன்
பேதையர்முன் ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து

 தன்சாதி
 தன்குடும்பம்
 தான்வாழ தனியிடத்து
 பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
 பண்புடையான் கவிஞனெனில்
 நானோ கவிஞனில்லை
 என்பாட்டும் கவிதையல்ல.

 பகுத்தறிவை ஊர்க்குரைத்து
 பணத்தறிவை தனக்குவைத்து
 தொகுத்துரைத்த பொய்களுக்கும்
 சோடனைகள் செய்து வைத்து
 நகந்து நுனி உண்மையின்றி
 நாள்முழுதும் வேடமிட்டு
 மடத்தில் உள்ள சாமிபோல்
 மாமாய கதையுரைத்து

 வகுத்துணரும் வழியறியா
 மானிடத்து தலைவரென்று
 பிழைத்திருக்கும் ஆண்மையில்லா
 பேதையனே கவிஞனெனில்
 நானோ கவிஞனில்லை
 என்பாட்டும் கவிதையல்ல..

மீண்டும் இன்னொரு பதிவில் சந்திப்போம்.

யார் கடவுள்?

4 comments

எனக்குள் அடிக்கடி எழுகின்ற கேள்வி இது? "யார் கடவுள்" என்பது.ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இரண்டு வகையான இறை நம்பிக்கை உண்டு.ஒன்று பரீட்சை,வேலை,கல்யாணம்,திருட்டுப்போன நகை கிடைப்பது,பய நீக்கம் போன்ற அன்றாட உடனடி பலன்களுக்கு நம்பும் உருவ கடவுள் அது ஐயப்பனோ, முருகனோ, குழந்தை யேசுவோ என மனித மனத்தில் உருவாக்கி கொள்ளக்கூடிய நம்பிக்கையின் குவியமாக இருக்கலாம்.மற்றொரு கடவுள் உருவமில்லாத,இந்தப் பிரபஞ்சம் முழுவதும் விரிந்து கிடக்கின்ற உருவமற்ற ஒரு சக்தி.ஒரு முனையில் தெருமுனை பிளட்பாரத்தை அடைத்துக் கொள்ளும் பிள்ளையார்; மறுமுனையில் உலகத்தை படைத்ததாக சொல்லப்படும் இறைவன்.

இவ்விரு கடவுளுக்கு நடுவில்தான் மனிதன் குழம்புகிறான்.ஒன்றே தேவன்;அவன் உருவமற்றவன் ! என்று சொல்லும் மதங்களான கிறித்துவம்,இஸ்லாம் போன்றவற்றில் கூட மனித மனத்தால் அளவிட்டுக் கொள்ள ஏதுவாக ஓர் இறைத்தூதர் இயேசுநாதராகவோ, நபிகள் நாயகமாகவோ தேவைப்படுகிறார். கடவுள் நம்பிக்கை என்ற உணர்வு யாராலும் சொல்லிகொடுக்காமல் மனிதனுக்குள் ஏற்பட்ட ஒரு உணர்வாகும்.Who is god


கடவுள் படைத்தாரா ? 


 கடவுள் மனிதரை படைத்தாரா என்ற கேள்விக்கு பதில் இருக்கிறதோ இல்லையோ கடவுளை படைத்தது மனிதன் என்பது மட்டும் உண்மை.அதிலும் மற்ற கடவுளைவிட பிள்ளையாருக்கும்,அம்மனுக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது.மற்ற எல்லா கடவுளுக்கும் குறிப்பிட்ட அவதாரமுண்டு. ஆனால் பிளேக் மாரியம்மன், மைதான மாரியம்மன், தண்டு மாரியம்மன், வேலை கொடுக்கும் பிள்ளையார், இரட்டை விநாயகர்,வினை தீர்க்கும் பிள்ளையார் என தெருவுக்கு ஒரு அவதாரம் எடுப்பது இவர்கள் மட்டும்தான். இப்படி மனிதனுக்கு வழிபட கண்டிப்பாக ஒரு உருவம் தேவைப்படுகிறது.

கி மு 483 ல் புத்தர் இறந்தபோது,அவர் உடல் எரிக்கப்பட்டதாம். அதன் சாம்பலை மற்ற நகரங்களுக்கு அனுப்பியதாக ஐதீகம்.புத்தரின் பல் ஸ்ரீலங்காவில் கண்டியில் மிகவும் ஆரதிக்கப்படுகிறது. ஏதோ ஒரு விதத்தில் வழிபட மனிதனுக்கு அடையாளம் தேவைப்படுகிறது. புதைத்த இடம், எரித்த இடம்,மறைந்த இடம்,பல்,செருப்பு.... இப்படி ஒரு அடையாள ஸ்தலம் இல்லையென்றல் மனித மனம் தவிக்கிறது.

உங்கள் வாழ்க்கை சீராக Highway ல் கார் செல்வதுபோல் சென்றால் பதசஞ்சலிலும் வேண்டாம்; பாதராயணரும் வேண்டாம்.ஆனால் அந்த பயணத்தில் சிறு பிரச்சனையை வரும்போதுதான் கடவுளை பற்றிக்கொள்ள மனம் பதப்பதக்கிறது. மனித மனத்தை பொறுத்தவரை, ஒரு கண் கண்ணாடி or ஒரு கைதடி போன்றது கடவுள்.

பக்தி vs ஆன்மீகம்

பக்திக்கும்,ஆன்மீகத்திற்கும் உள்ள வேறுபாடு பலருக்கும் தெரிவதில்லை.பக்தி ஒன்றை பற்றிக்கொண்டு திரும்ப,திரும்ப அதையே செய்வது.பல ஆண்டுகளாக பக்தி பாடல்களையும்,ஸ்லோகங்களும் பாடி பூஜை செய்யும் பலரை நமக்கு தெரியும். ஆனால் தாம் தினமும் சொல்லுகின்ற ,ஸ்லோகங்களுக்கு அர்த்தம் அவருக்கு தெரியாது.இது போன்ற பக்தியைத்தான் கடவுள் நம்பிக்கையென்று நம் வருங்கால சந்ததிக்கு சொல்லிக்கொடுக்கிறோம்.ஆன்மீகம் என்பது தன் நிலை உணர்தல்.தனக்குள் இருக்கும் கடவுளை தேடுவதாகும் (அகம் பிரம்மாஸ்மி)Who is god

நம் மக்களிடையே எஞ்சி நிற்பது வெறும் பக்திதான்.மற்ற மொழிக்கில்லதா தனிச் சிறப்பு தமிழுக்கு உள்ளது.தமிழை வளர்த்ததில் பெரிய பங்கு பக்திக்கு உண்டு. தமிழிழ் உள்ள சிறப்பான நூல்கள் யாவும் பக்தி இலக்கியங்களே. தேவாரம்,திருவாசகம்,திருப்புகழ்,ஆண்டாள் பாசுரம் என தமிழை வளர்த்தது பக்திதான்.

இதுபோன்ற விஷயங்களை நாம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றிருக்க வேண்டும். ஆனால் அதை விடுத்து ஜோதிடம்,ஜாதகம்,வாஸ்து என மனிதரை பயப் படுத்துகின்றவற்றைதான் நாம் கட்டி காப்பாற்றுகின்றோம்.மெள்ள ஒரு மதத்தின் ஆரம்பகால காரணங்கள் விலகிப்போய்,அதன் சடங்குகள் மட்டும் மிச்சமிருக்கும்நிலை,எல்லா மததிற்க்கும் வெவ்வேறு அளவில் உண்டு.


கடவுளை எப்படி உணர்வது

நாம் எப்படி கடவுளை வணங்குகின்றோம்? வழியில் கடந்து செல்லும்போது வருகின்ற பிள்ளையார்;வண்டியில் செல்லும்போது ஒரு நொடிப் பொழுதில் கடக்கும் முருகன்;சினிமா அரட்டை அடித்துக்கொண்டு கடவுளை தரிசிக்க செல்வது;பிரசாதத்திற்காக கோயிலுக்கு செல்வது இவைதான் பக்தியா ?


திருச் சிற்றம்பலம்

மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரை ஆர் சுழற்கு என்
கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்
பொய்தான் தவிர்த்து உன்னைப் போற்றி சய சய போற்றி என்னும்
கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டு கொள்ளே.

கடவுளை பார்த்தவுடன் உடலும் மனமும் நடுங்கி உடலெல்லாம் வியர்த்து,கண்ணீர் ததும்ப்பி,பொய்களை தவிர்த்து கைகளை நெகிழ்ந்து கடவுளை கும்பிடுவதாக மணிக்கவாசகர் கூறுகிறார்.இந்த உணர்வு எனக்கு கடவுளை பார்த்தவுடன் வரவில்லையே? ஆனால், ஒரு கிரிக்கெட் போட்டியில் ஒரு ஓவருக்கு 19 ரன்கள் தேவைப்படும்போதும்,அந்த ஆட்டத்தை என்னுடைய அணி வெற்றிப் பெறும்போது என்னால் அதை உணர முடிகிறதே (மணிகவாசகருக்கு ஏற்பட்டதுபோல்) . அப்போது கிரிக்கெட்தான் கடவுளா? எது ஒன்று மனிதனை மனம் நெகிழ செய்கிறதோ அதுதான் கடவுளாக இருக்க முடியும்.


பாரதியின் பார்வை

நாம் எதையெல்லாம் கடவுள் வழிபாடு என்று நினைக்கிறோமோ அந்த எல்லாவற்றையும் உடைத்து எறிகிறான் பாரதி.

காவித் துணிவேண்டா,கற்றைச் சடை வேண்டா;
பாவித்தால் போதும் பரமநிலை யெய்துதற்கே.
சாத்திரங்கள் வேண்டா சதுமறைக ளேதுமில்லை;
தோத்திரங் ளில்லையுளந் தொட்டுநின்றாற் போதுமடா!
தவமொன்று மில்லையொரு சாதனையு மில்லையடா !
சிவமொன்றே யுள்ளதெனச் சிந்தை செய்தாற்போதுமடா !

கடவுளை உணர்வதற்கு எந்த வகையான உடையோ , அணிகலனோ தேவையில்லை.உன்னை உணர்ந்தால் போதும் என்கின்றான் பாரதி.எந்த தோத்திரங்கள் தேவையில்லை அவனை உன் மனதால் வணங்கி நின்றால் போதும் என்கிறான்.


ஆழ்வார்களின் பார்வை

கடவுள் தேவையா? தேவைபட்டால் அவர் எப்படிப்பட்ட என்ன வடிவம்? என்ற கேள்விக்கு எப்படி வேண்டுமானாலும் நினைத்துக்கொள்,எப்படி வேண்டுமானாலும் பெயர் சொல் எந்த வடிவத்தில் சிந்தித்துப் பார்கிறோமோ,அந்த வடிவம்தான் கடவுள் என்கிறார் பொய்கை ஆழ்வார்.

Who is god

தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்தது எம்பேர்மற்று அப்பேர் - தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையாதிருப்பாரே
அவ்வண்ணம் ஆழியானாம்.


மனிதனுக்கோ கடவுள்களுக்கோ பெயர்களோ வழிபாடோ தேவையில்லை,அன்றாட வாழ்வில் கடமையை செய்து நல்ல காரியங்களை செய்தால் போதும் என்கிறார் நம்மாழ்வார்.


அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனஅடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்


நாஸ்திகம் ?

கடவுள் இல்லை என்று சொல்வதை மிகவும் கிண்டலாக பார்க்கிறது இந்த சமூகம். என்னை பொறுத்தவரை ஒரு நாஸ்தீகனுக்கு அதிக மன வலிமை தேவைப்படுகிறது. அவனுடைய எல்ல செயலுக்கும் அவன்தான் பொறுப்பு.அவன் காலம்,நேரம்,விதி,ஜாதகம் என அதன் மேல் தன்னுடைய தவற்றை போட முடியாது. நாஸ்திகன் எல்லாவற்றையும் அறிவால் அறிய முயல்கிறான். நாஸ்திகன் கடவுளை எதிர்த்தது விட,நாஸ்திகனை கடவுள் நம்பிகை உள்ளவர்கள் எதிர்த்ததுதான் அதிகம்.நாஸ்திகமும் ஒரு மதம்தான்.

மீண்டும் என்னுடைய முதல் கேள்விக்கே வருவோம். யார் கடவுள்?அவர் எப்படி இருப்பார்? இந்த ஒரு பதிவில் என்னால் என்னுடைய எல்லா கருத்தையும் சொல்ல இயலவில்லை. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லுங்கள். என்னுடைய அடுத்த பதிவில் இந்த கேள்விக்கான என் கருத்துக்கள் தருகிறேன்.

தொடரும் ...

தெரிந்த பாடல் தெரியாத தகவல்கள்

0 comments


இந்தப் பதிவில் MGR ம் கண்ணதாசனும் இணைந்து பணியாற்றிய இரண்டு சுவையான பாடல்களை பார்ப்போம்.கண்ணதாசனும் MGR ம் மிகச்சிறந்த நண்பர்கள்.இருவரும் ஒரே கட்சியில் பணியாற்றியவர்கள்.1972 ம் ஆண்டு பொது இடங்களில் குடிப்பதற்கான தடை நீக்கப்பட்டிருந்தது அதனால் ஆண்கள் குடிபோதையில் அடிமையாகி குடும்பங்களை மறந்து திரிகிறார்கள் என்று நிறைய பெண்கள் MGR இடம் முறையிட்டனர்.MGR அந்த காலத்தில் தன் படங்களில் சமூக பிரச்சனையை தீர்ப்பது போன்ற காட்சியில் அதிகம் நடிப்பார்.

தன் அரசியல் பிரவேசத்திற்கு சினிமாவை ஒரு மிகச் சிறந்த கருவியாக MGR பயன்படுத்தினார்.MGR குடிப்பழக்கத்திற்கு எதிரான தன் கருத்தை படத்தில் பாடலாக வைக்க வேண்டும் என நினைத்தார்.இந்த பாடலை நம் கவிஞரை விட யாராலும் எழுத முடியாது என்று நினைத்து அவரிடம் இந்த பாடலை எழுத சொன்னார்.நம் கவிஞரோ எப்போதும் போதையில் இருப்பவர் அதனால் தான் எப்படி இந்த பாடலை எழுத முடியும் என யோசித்தார்.இருந்தாலும் MGR ன் அன்புக் கட்டளையும் தட்ட முடியவில்லை.

அந்த சூழ்நிலையில் அவர் எழுதிய பாடல்தான் "சிலர் குடிப்பவர் போலே நடிப்பார் சிலர் நடிப்பவர் போலே குடிப்பார்" எனத் தொடங்கும் பாடல். இந்தப் பாடலில் குடியால் ஏற்படுகின்ற தீமையும் சொல்லியிறுப்பார் அதே சமயம் குடியால் ஏற்படுகின்ற அனுபவத்தையும் மறைமுகமாக சொல்லியிறுப்பார்.

படம் : சங்கே முழங்கு  
இசை : MSV  
பாடியவர் : TMS  

Kannadasan


சிலர் குடிப்பதுபோலே நடிப்பார் சிலர் நடிப்பதுபோலே குடிப்பார்
சிலர் பாட்டில் மயங்குவார் சிலர் பாட்டலில் மயங்குவார்
மதுவுக்கு ஏது ரகசியம் அந்த மயக்கத்தில் எல்லாம் அவசரம்
மதுவில் விழுந்த வார்த்தையை மறுநாள் கேட்பது அவசியம்

நானமில்லை வெட்கமில்லை போதையேறும்போது
நல்லவனும் தீயவனே கோப்பையேந்தும்போது
புகழிலும் போதையில்லையே பிள்ளை மழழையில் போதையில்லையே
காதலில் போதையில்லையே நெஞ்சில் கருணையில் போதையில்லையே

மனம்,மதி,அறம்,நெறி தரும் சுகம் மதுதருமோ
நீ நினைக்கும் போதைவரும் நன்மைசெய்துபாரு
நிம்மதியை தேடி நின்றால் உண்மை சொல்லிப்பாரு


கவிஞரை பொறுத்தவரை குடிப்பது என்பது தனி மனித ஒழுக்கம் சார்ந்த பிரச்சனை அது எந்த விதத்திலும் சமுதாயத்தை பாதிக்காது என்பது அவரது கருத்து. எல்லாவற்றிலும் ஒரு போதையுண்டு. பணம் பொருள்,புகழ் போன்றவையும் ஒரு வகையான போதையே அதனால் குடிபோதை பெரிய தவறல்ல என்பது அவரது கருத்து.

MGR அவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்.1963ல் அவர் திமுக வில் தீவிரமாக பணியாற்றி கொண்டிருந்தார்.திமுக என்பது கடவுள் நம்பிக்கையில்லாத கடவுளுக்கு எதிரான ஒரு கட்சியாக வடிவெடுத்திருந்த சமயம் அது.அப்போது MGR ன் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் அவர் கட்சியின் கொள்கையை மீறுகிறார் என்று குற்றம் சாட்டி அவரை கட்சியின் தலைமையில் சொல்லி கட்சியை விட்டு அகற்ற பார்த்தனர்.

அந்த இக்கட்டான சூழ்நிலையில் மற்றவர்களுக்கு பாடம் புகுத்துவது போன்ற ஒரு பாடல் எழுதுமாறு கண்ணதாசனிடம் கேட்டார்.சூழ்நிலைக்கு பாட்டு எழுதுவது என்பது நம் கவிஞருக்கு கைவந்த கலை.அப்படி அவர் எழுதிய பாடல்தான் "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே" என்று தொடங்கும் பாடல்.

இயக்குனர் : சங்கர்  
இசை: விஸ்வநாதன் ,ராமமூர்த்தி  
படம் : பணத்தோட்டம் (1963)  

Kannadasan


என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிப்படும் மயங்காதே
ஒரு தலைவனிருக்கிறான் மயங்காதே

பின்னாலே தெரிவது அரிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன்வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே போராடு

உலகத்தில் திருடர்கள் சரிபாதி
ஊமைகள் குருடர்கள் அதில்பாதி
கழகத்தில் பிறப்பதுதான் மீதி
மனம் கலங்காதே மதிமயங்காதே


இந்தப்பாடலில் தனக்கு எதிராக என்னதான் நடந்தாலும் கடைசியில் நியாயம்தான் ஜெயிக்கும் என்பதுபோல் பாடல் எழுதியிருப்பர். " ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே" என்ற வரிகள் வரும் காட்சியில் பின்னாலே கோபுரங்களை பார்த்து MGR கை காட்டுவது போல் அமைத்திருக்கும் ( அது கடவுளை மறைமுகமாக குறிப்பதாக காட்சியமைதிருப்பார் ) "பின்னாலே தெரிவது அரிச்சுவடு முன்னாலே இருப்பது அவன் வீடு" போன்ற வரிகள் இரண்டு அர்த்தங்களுடன் எழுதப்பட்டவை. இவ்வாறு MGR ன் பல இக்கட்டான சூழ்நிலைக்கு ஏற்றவாறு காலத்தால் அழியாத பல பாடல்களை தந்தவர் கண்ணதாசன்.அதனால்தான் அவரை MGR தமிழ்நாட்டின் அரசவை கவிஞராக்கி அழகுப்பார்த்தார்.

மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்.

 
  • தமிழ் ஆவணம்